தனிநபர்கள், முதியவர்கள் என எங்களுக்கான வீட்டுத்திட்டங்களை வழங்க மறுக்கின்றனர். நாங்களும் போரினால் பாதிக்கப்பட்டு பிள்ளைகளை இழந்த நிலையில் இன்று அநாதரவாக வாழ்கின்றோம். இதுவரை வீட்டுத்திட்டங்கள் மற்றும் ஏனைய உதவிகள் கிடைக்காது வாழும் தனி நபர்கள் மற்றும் முதியவர்களை கொண்ட குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறுபட்ட உதவிகள் வழங்கப்படுகின்ற போதும் தனிநபர்களை கொண்ட குடும்பங்கள் முதியவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கான உதவிகள் கிடைப்பதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இவ்வாறு மீள்குடியேறி வாழ்ந்து வரும் எமக்கு உதவிகள் உரியமுறையில் வழங்கப்படுவதில்லை. எமக்கான உதவிகளை வழங்குவதில் தங்களை தட்டிக்கழிக்கின்றன.
வீட்டுத்திட்டங்களுக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்படும் போது புள்ளியிடல் முறையில் மேற்கொள்ளப்படும் தெரிவுகளில் நாங்கள் உள்வாங்கப்படுவதில்லை. ஏனைய வாழ்வாதார உதவிகளுக்கான தெரிவுகளிலும் நாங்கள் உள்வாங்கப்படுவதில்லை.
நாங்களும் இந்த மண்ணில் இருந்து போரினால் பாதிப்புக்களை எதிர்கொண்டு இடம்பெயர்ந்து பிள்ளைகளையும் உறவுகளையும் இழந்து தனி மனிதர்களாகவும் முதியவர்களாகவும் வாழ்ந்து வருகின்றோம்.
மீள்குடியேறியபோதும் அமைக்கப்பட்ட தற்காலிக வீடுகளில் நாங்கள் வாழ்ந்துவரும் நிலையில் வீடுகள் முழுமையாகவே சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவதுடன், குடியிருக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
எனவே எமக்கு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுத்தர உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
பரந்தன் நிருபர்
No comments:
Post a Comment