ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். அவர் விடுதலை செய்யப்பட்டதன் நோக்கம் இவ்வாறான அடாவடித்தனங்களை தொடர்ந்து செய்வதற்காகவே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை கடந்த கால ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் எடுத்த முடிவிற்கும் தற்போது நாங்கள் எடுத்திருக்கின்ற முடிவிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.
2005ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் ஜனாதிபதித் தேர்தலானது நடைபெற்றபோது பெரும்பாலான மக்கள் ரணிலை ஆதரிப்பதற்கு தயாராக இருந்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரியிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தது. அன்றைய சூழ்நிலையில் அந்த முடிவு சரியாகவே இருந்தது.
ஒவ்வொரு களத்திலும் தமிழ்த் தேசிய பலத்தினை வைத்துக்கொண்டு அரசியல் செய்கின்ற தலைமைகள் எடுக்கின்ற முடிவை தமிழ் மக்கள் ஆதரித்து வந்திருக்கின்றார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தில் கட்டளையிட்ட மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதா அல்லது களத்தில் நின்று போராடிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதா என்ற சங்கடமான நிலை பலரின் மத்தியில் ஏற்பட்டிருந்தது.
நாங்கள் இருதரப்புடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி எழுத்துமூலமான சில உத்தரவாதங்களை பெற்ற பின்னர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக முடிவெடுத்திருந்தோம்.
வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும், வட கிழக்கு இணைந்த ஒரு தீர்வை தரவேண்டும் என்ற உத்தரவாதங்களை எழுத்து மூலமாக சரத் பொன்சேகாவிடமிருந்து நாங்கள் பெற்றிருந்தோம்.
அந்த விடயத்தை நாங்கள் வெளியில் சொல்கின்றபோது சிங்கள மக்கள் அவருக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதற்காக நாங்கள் அதனை தவிர்த்திருந்தோம்.
தமிழ் மக்களை பொறுத்தரை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்படுகின்றது. சிலர் இந்த தேர்தலை மக்களிடமே விடுங்கள் என்கின்றனர். சிலர் கோட்டாவை வீழ்த்துவதற்காக இன்னொருவருக்கு வாக்களியுங்கள் என்கின்றனர்.
என்னைப் பொறுத்தவரை தேர்தலை புறக்கணிப்பதானது நாங்கள் யாரை வெறுக்கின்றோமோ அவரை ஆதரிப்பதாகவே வரும். ஆகவே நாங்கள் யாரை வெறுக்கின்றோமோ அவரை தோற்கடிப்பதற்காக 2010ஆம் ஆண்டிலே எடுத்த முடிவையே எடுக்க வேண்டி ஏற்படுகின்றது.
அதற்காக எந்தவித கோரிக்கையோ உத்தரவாதமோ இன்றி கண்ணை மூடிக்கொண்டு எவரையும் ஆதரிக்க முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment