கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கை பிரஜையல்ல - மனு நாளை மறுதினம் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கை பிரஜையல்ல - மனு நாளை மறுதினம் விசாரணை

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக ஏற்பதை இடைநீக்கம் செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனு, மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாளை மறுதினம் (02) விசாரிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக ஏற்பதை இடைநிறுத்தி, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு உத்தரவொன்றை வழங்குமாறு, பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர மற்றும் புரவெசி பலய அமைப்பின் இணை அழைப்பாளரும் சமூக ஆர்வலருமான காமினி வியங்கொட ஆகியோர், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இம்மனு, இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, மனுவின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு நீதிபதிகள் குழுவில் மேலதிக நீதவானாக மஹிந்த சமயவர்தனவை இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்போது, இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில் ஏதேனும் எதிர்ப்புகள் உண்டா என, பிரதிவாதியான கோட்டபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளிடம் நீதிபதிகள் குழு கேள்வியெழுப்பியது. கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் அதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என பதிலளித்தனர்.

இம்மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அவ்வமைச்சின் செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர், சிஐடி பணிப்பாளர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை கடவுச்சீட்டொன்றை பெற்றதாக மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முறையான குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல் அவர் இவ்வாறு கடவுச்சீட்டைப் பெற்றுள்ளதாகவும் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த மனுதாரர்கள், அவ்வாறு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

எனவே, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முடிவை செல்லுபடியற்றதாக்குவதற்கான உத்தரவை வழங்குமாறு கோரியுள்ள மனுதாரர்கள், இது தொடர்பான இறுதி தீர்ப்பை வழங்கும் வரை, குறித்த கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவை வழங்குமாறும் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment