பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை - நிதி அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை - நிதி அமைச்சு

சுற்றுலாத் துறையை அபிவிருத்தியடையச் செய்யும் நோக்கில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு 2015 க்குப் பிறகு மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சினால் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தற்போது 4910 அனுமதி பெற்ற மதுபானசாலைகள் உள்ளன, அவற்றில் 1100 சில்லறை மதுபான விற்பனையாளர்கள், 1567 ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் 554 உணவகங்கள் மதுபான விநியோகத்துக்கு அனுமதி பெற்றவைகளாகும். 

மதுவரித் திணைக்களம் 368 வைன் மற்றும் பியர் விற்பனை நிலையங்களுக்கும், 200 கள்ளுத் தவறணைகளுக்கும் உரிமங்களை வழங்கியுள்ளது. மேலும், 1080 வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை நிலையங்களுக்கான அனுமதிகளையும் திணைக்களம் வழங்கியுள்ளது.

எந்தவொரு நபரும் மதுபான உரிமத்தைப் பெற விரும்பினால், விண்ணப்பதாரர் மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் பின்பற்றி அத்தகைய அனுமதிப் பத்திரத்தைப் பெறலாம்.

மதுபான அனுமதிப் பத்திரம் பெற விண்ணப்பிக்க தகுதியுடையவராக இருக்க, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவொரு குற்றத்திற்கும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருக்கக்கூடாது, மேலும் விண்ணப்பதாரி வரி செலுத்துவோராகவும் இருக்க வேண்டும். 

அத்தோடு, மதுபானசாலையின் வகையின்படி, மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைக்கு குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் மதுபான விற்பனை நிலையம் நிறுவப்பட வேண்டும்.

மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தேவையான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கருத்தில் கொண்டு, மதுவரித் திணைக்களத்தின் அறிவிப்புகளின் விதிகள் விண்ணப்பதாரர்களால் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், விண்ணப்பதாரர் வதியும் பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட தொடர்புடைய விவரங்களை திணைக்களம் பெறும். 

எந்தவொரு தகுதியான விண்ணப்பதாரருக்கும் மதுபான உரிமங்களை வழங்குவதற்கான முழு அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் மதுவரித் திணைக்கள ஆணையயாளருக்கு உண்டு. மதுபான விநியோக அனுமதி பெற்றவர்களின் பட்டியல் மதுவரித் திணைக்களத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment