குடியகல்வு அதிகாரங்கள் தேரருக்கு எப்போது கிடைத்தது என கேள்வியெழுப்பியுள்ள ரெலோ அமைப்பு, இவ்வாறான இனவாதக் கூச்சல்களால் தமிழர்களை அச்சுறுத்திவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சிங்கள பௌத்த நாடு. இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்த நாட்டில் இருக்கலாம். ஏற்காதவர்கள் தங்களது உடமைகளுடன் தாராளமாக வேறு நாடுகளுக்குச் செல்லலாம் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ரெலோ அமைப்பு இன்று (சனிக்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், “ஞானசார தேரரின் பச்சையான பேரினவாதக் கருத்துக்கள் ஆச்சரியத்துக்கு உரியன அல்ல. அவரிடமிருந்து வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் எமது கேள்வியெல்லாம் குடியகல்வு அதிகாரங்கள் அவருக்கு எப்போது எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்பது தான்.
ஞானசார தேரர் வெறும் முகமூடி மாத்திரமே. அந்த முகமூடியின் பின்னால் வலிமைகொண்ட இனவெறிச் சக்திகள் ஒளிந்துநின்று செயற்பட்டு வருகின்றன என்பதை நாமறிவோம்.
ஞானசார தேரர் இவ்விதம் பேரினவாத கூச்சல்களை எழுப்பிக்கொண்டிருப்பதையிட்டு அவருக்கு கருணை அடிப்படையில் பொதுமன்னிப்புக் கொடுத்தவரும் பொலிஸ் துறைக்குப் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சை நிர்வகிப்பவருமான ஜனாதிபதி என்ன சொல்லப் போகிறார்?
ஜனாதிபதித் தேர்தலை நாடு எதிர்நோக்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் ஓர் நிலைப்பாட்டுக்கு வருவதற்கு இவர்களின் பதில்கள் கட்டாயமானவையாகும்.
அதேநேரத்தில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தங்களின் சட்டபூர்வமான உரிமைகள் என்ன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
இந்த நிலையில் தேரரின் இனவாதக் கூச்சலையிட்டு தமிழர்கள் ஒருபோதும் மிரள மாட்டார்கள். அவர்களின் பயமுறுத்தல்கள் தமிழர்களை எதுவும் செய்துவிடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment