யானைகளின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 29, 2019

யானைகளின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

ஹபரணை - திகம்பதஹ - ஹிரிவடுன்ன வனப்பகுதியில் 7 யானைகள் உயிரிழந்தமை தொடர்பில் இன்றைய தினத்திற்குள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு வனஜீவராசிகள் அமைச்சு, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவுக்கு அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.

பரிசோதனை அறிக்கையை இன்று மாலை வேளைக்குள் சமர்ப்பிக்குமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளோம். எவ்வாறு இந்த மரணம் சம்பவித்துள்ளது என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டும். யானைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் எமக்கு கேள்விகள் எழுந்துள்ளன. 

இந்த யானைகள் கலாவெவ பகுதியிலிருந்தே இங்கு வருகை தந்துள்ளன. இவை இங்குள்ள யானைகள் இல்லை, ஆராய்ந்து எமக்கு தகவல் வழங்குவதற்கு இராணுவத்தினரையும் ஈடுபடுத்தியுள்ளோம். இராணுவத்தின் அறிக்கையும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அறிக்கையும் எமக்கு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.

ஹபரணை - திகம்பதஹ - ஹிரிவடுன்ன வனப்பகுதியில் நேற்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றுமுன்தினம் மாலை வரை 7 யானைகளின் உடல்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டன.

மேலதிக விசாரணைகளுக்காக, யானைகளின் உடற்பாகங்கள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தமது திணைக்களமும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment