நீராவியடி விவகாரம் : கிழக்கு இலங்கை இந்து குருமார் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்! - வியாழேந்திரன் எம்பியும் பங்கேற்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 27, 2019

நீராவியடி விவகாரம் : கிழக்கு இலங்கை இந்து குருமார் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்! - வியாழேந்திரன் எம்பியும் பங்கேற்பு

கிழக்கு இலங்கை இந்து குருமார் ஒன்றியம் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மட்டக்களப்பில் முன்னெடுத்தது.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இறந்த தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமை மற்றும் அங்கு ஏற்பட்ட அமைதியின்மையைக் கண்டித்து மட்டக்களப்பு காந்திப்பூங்காவிற்கு முன்னால் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து குருமார்கள் கலந்துகொண்டு அமைதியாக தமது கண்டனத்தை வெளியிட்டனர்.

இதன்போது அவர்கள் தெரிவிக்கையில், “கடந்த 23 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீராவியடியில் ஏற்பட்ட பிரச்சினையானது அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும். ‘இது பௌத்த நாடு’ என பிக்குமார் கூறுவது ஏற்புடையதல்ல. அதுமட்டுமல்லாமல் நீதித்துறையை பிக்குமார் அவமதித்துள்ளார்கள். தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

எமது நாட்டில் இந்துமத பொக்கிசங்கள் நிறைந்த இடமாக போற்றப்படுகின்ற முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் புனிதத் தன்மையை சீர்கெடுத்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

திருகோணமலை கன்னியாவிலும், முல்லைதீவிலும் நடைபெற்ற தகாத சம்பவங்கள் எமது இந்து சமயத்தை தொடர்ச்சியாக அவமதித்து வருகின்ற செயற்பாடுகளாகவே அமைந்துள்ளன.

நாட்டில் நல்லாட்சி என்ற பெயரில் எமது மக்கள், மதம், எமது கலை கலாசாரம் என்பவற்றில் பாரிய களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மன்னிக்க முடியாது. இதற்கு முறையான தீர்வு எட்டப்படவேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனும் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment