இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இன்று இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அங்கிலிக்கன் திருச்சபையின் ஏற்பாட்டில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் அவர் நாளை மறுதினம் 31ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு இன்று காலை 10.30 மணிக்கு செல்லும் அவர் அங்கு பிரதேச மக்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அதனை தொடர்ந்து பிற்பகல் இரண்டு மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ள அவர் அதனையடுத்து கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவையும் சந்திக்கவுள்ளார்.
பிற்பகல் 3 மணிக்கு எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய பின் கொழும்பு அங்கிலிக்கன் திருச்சபையின் ஆயர்கள் மற்றும் முக்கியஸ்தர்களைச் சந்திக்கவுள்ளார்.
அதனையடுத்து கொழும்பு-07 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள 'வாழும் மீட்பர்' ஆலயத்தில் விசேட ஆராதனையொன்றையும் பேராயர் நிகழ்த்தவுள்ளார்.
நாளை 30ஆம் திகதி கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்யும் அவர் தலதா மாளிகையைத் தரிசித்த பின் மல்வத்த, அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களையும் சந்திக்கவுள்ளதாக அங்கிலிக்கன் திருச்சபையின் ஆயர் பேரருட் திரு திலோராஜ் கனகசபை தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment