ஐக்கிய தேசியக் கட்சியை துண்டாடுவதற்கு சில சக்திகள் முனைப்புக்காட்டி வருவதாகவும் அவ்வாறான சக்திகளுக்கு ஜனநாயக ரீதியில் தகுந்த பதிலடி கொடுக்கப்படுமெனவும் கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கட்சித் தலைவரையும், பிரதித் தலைவரையும் இணைத்துக்கொண்டு கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்கு உறுதியுடன் செயற்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
மகரகமவில் இடம்பெற்ற தேசிய கல்வி நிருவாகத்தின் மூன்று மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நடும் வைபவத்தில் கலந்துகொண்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்துவதற்கு சில ஊடகங்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. தலைமைத்துவத்தையும், பிரதித் தலைவரையும் மோதவிட்டு அதன் மூலம்லம் தமது இலக்கை அடைய இவர்கள் முயற்சிக்கின்றனர். அது ஒருபோதும் நனவாகப் போவதில்லை.
தலைமையையும், பிரதித் தலைவரையும் பிரிப்பதற்கு எச்சக்திக்கும் நாம் இடமளிக்கப்போவதில்லை. இருவரையும் ஒன்றுபடுத்தி எமது பயணத்தை தொடர்வோம்.
இரண்டு தலைவர்களும் கட்சிக்கு மிக முக்கியமானவர்கள். கட்சி பலமானதாக கட்டியெழுப்பப்பட வேண்டும். சில ஊடகங்களின் நோக்கம் ஐ.தே.க.வை சின்னாபின்னமாக்குவதேயாகும். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
இந்த நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்த ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். ஜனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட கட்சியாகும். ஜனாதிபதித் தேர்தலில் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பது கட்சியின் செயற்குழுவும், பாராளுமன்ற குழுவுமேயாகும் என்றார்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment