காலி கடற் பிராந்தியத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகிலிருந்த போதைப் பொருள் தொடர்பில் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Monday, August 19, 2019

காலி கடற் பிராந்தியத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகிலிருந்த போதைப் பொருள் தொடர்பில் விசாரணை

காலி கடற் பிராந்தியத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகிலிருந்து போதைப் பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான குழுவொன்று காலிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி கடற் பிராந்தியத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகிலிருந்து சுமார் 85 கிலோ கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 10 ஆம் திகதி காலி கடற் பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட படகில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர், லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் திகதி, தென் கடற் பிராந்தியத்தில் சந்தேகத்தின் பேரில் வௌிநாட்டு படகொன்றை சோதனையிட்ட கடற்படையினரால் சுமார் 70 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

குறித்த படகில் பயணித்த 6 ஈரானியர்கள் இதன்போது கைது செய்யப்பட்டனர். அத்துடன், கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி காலி கடற்பரப்பில் படகொன்று கைப்பற்றப்பட்டதுடன் அதிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களின் படகிலிருந்து ஹெரோயின் மற்றும் ஹசீஸ் வகையான மாதிரிகள் கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகித்ததுடன் அது தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர், சட்ட நடவடிக்கைகளை எடுத்ததாக கடற்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த படகுகளைத் தீவிர சோதனைக்குட்படுத்தியபோது, மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் என சந்தேகிக்கும் 85 கிலோ கிராம் போதைப் பொருள் வகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர், லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment