ஜனநாயக தேசிய முன்னணி ஓகஸ்ட் மாத இறுதிக்குள் உருவாக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கூட்டணி அமைத்து ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது என்ற நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
2014 ஆம் ஆண்டு நாம் நாட்டுக்காக ஒன்றாக இணைந்து கொண்டோம். ஜனநாயகத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, வீழ்ச்சியுற்ற பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்தல் போன்ற காரணங்களுக்காகவே அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் பல இணைந்து கூட்டணியொன்றை உருவாக்கியிருந்தோம்.
இந்தக் காலப் பகுதியில் முக்கியம் கொடுக்க வேண்டிய விடயங்களை கவனத்தில் கொண்டிருந்தோம். அரசியல் சதியின் காரணமாக நாடு அன்று குழப்பமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதன் காரணமாக மிகவும் விரிவான, பலமான மற்றும் உறுதியான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டோம்.
நாட்டைப் பாதுகாப்பது மற்றும் நாட்டை கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.
இதற்கமைய புதிய நாட்டையும், நவீன சமுதாயத்தையும் உருவாக்குவதை நோக்காகக் கொண்டு ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் விரிவான கூட்டணியை அமைத்து அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்குத் தீர்மானித்தோம். சகல தரப்பினருடனும் கலந்துரையாடி, ஜனநாயக ரீதியாகவே அனைத்தையும் செய்துவருகின்றோம்.
ஜனநாயக தேசிய முன்னணியை ஆரம்பிப்பதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தையில் மேலும் புதிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தக் கருத்துக்களையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியமானது. இதன் காரணமாக ஜனநாயக தேசிய முன்னணிக்கான ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த எமக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் முடிவடைவதற்கு முன்னர் ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். இந்தக் கூட்டணிக்கான ஒப்பந்தத்தினால் எந்தவொரு கட்சியினதும் நாளாந்த செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாது.
ஜனநாயக தேசிய முன்னணிக்காக தேசிய கொள்கைளை நாம் தயாரிப்போம். இந்தக் கொள்கைத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே எமது எதிர்கால செயற்பாடுகள் அமையும்.
தனியொரு கட்சியாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கொள்ள முடியாது. இது முன்னர் பெற்றுக் கொண்ட அனுபவமாகும். இதனாலேயே பரந்துபட்ட அரசியல் கூட்டணியொன்றை அமைப்பதற்காகவே நான் கடந்த காலங்களில் எனது நேரத்தை அதிகமாகச் செலவிட்டுள்ளேன். இந்த நோக்கத்திலிருந்து நானோ, ஏனைய கட்சிகளின் தலைவர்களோ விலகப்போவதில்லை என்றார்.
No comments:
Post a Comment