கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் - 29 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி தரமுயர்த்த தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, August 5, 2019

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் - 29 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி தரமுயர்த்த தீர்மானம்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தற்போதுள்ள 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு முழுமையான பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் இறுதித்தீர்மானம் எடுத்துள்ளது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தும் விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் விசேட கலந்துரையாடல் கூட்டம் கல்முனை கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் மகா சங்கத்தின் தலைவர் கா.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கல்முனைப் பிரதேச புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் பொது நிர்வாக அமைச்சு மட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் இப்பிரதேச செயலகம் தொடர்பில் விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. 

இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து தமிழ் அரசியல்வாதிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை உருவாக்குவதில் 1989 ஆம் ஆண்டிலிருந்து அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வந்துள்ளது. 

அந்த வகையில் இப்பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தும் விடயம் தொடர்பான இறுதித் தீர்மானம் கல்முனையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தற்போதுள்ள 29 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக முழுமையான காணி, நிதி அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்படுவதை தமிழர் மகா சங்கம் வரவேற்கின்றது. 

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் அரசாங்கத்தினாலும் இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு இடையூறாக நிற்பதில்லை எனவும் ஆனால் எல்லை நிர்ணயம் செய்யப்படும் விடயத்தில் தமிழர் மகா சங்கம் தொடர்ந்தும் தனது பங்களிப்பினை மேற்கொள்ளும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு, பாண்டிருப்பு நிருபர்கள்

No comments:

Post a Comment