கொழும்பு வடக்கில் ஆபத்தான எரிபொருள் குழாய்கள் செல்லும் வழிகளில் குடியிருக்கும் 419 குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு இன்று அமைச்சரவையில் அனுமதி கோரப்படவுள்ளது.
எரிபொருள் கொண்டு செல்லப்படும் குழாய்களைப் புனரமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டால் மின்சாரசபைக்கு வழங்கப்படும் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கம் அச்சுறுத்தியிருந்த நிலையிலே இன்று அமைச்சரவையில் அனுமதி கோரப்படவுள்ளது.
"இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளித்துள்ளது. இன்று அமைச்சரவையின் அனுமதியைப் பெற்ற பின்னர் 140 மீற்றர் நீளமான எரிபொருள் விநியோக குளாயில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள முடியும்" என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர், பொறியியலாளர் மனு ஜயவர்த்தன தெரிவித்தார்.
"நாளை (03) இது தொடர்பில் ஆராய்ந்து முடிவு வழங்குவதாக எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதில் எமக்குத் திருப்தியில்லையாயின் திட்டமிட்டதுபோல 5ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இலங்கை மின்சார சபைக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கபீர் ஹாசிமுடன் தாம் கலந்துரையாடியதாகவும், இதனை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்ததாகவும் கூறினார்.
இவ்விடயம் பற்றி கலந்துரையாடுவதற்கு அமைச்சர்களான சம்பிக்க ரவணக்க, ரவி கருணாநாயக்க, கபீர் ஹாசிம், மங்கள சமரவீர ஆகியோரைக் கொண்ட அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நஷ்டஈடு வழங்குவது பற்றி தீர்மானம் எடுக்கவுள்ளனர்.
கொழும்பு வடக்கில் உள்ள 75 வருட பழமை வாய்ந்த எரிபொருள் விநியோகக் குழாய்களை புனரமைப்பதற்கு இடமளிக்காவிட்டால் இலங்கை மின்சார சபைக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தன.
அந்தப் பகுதியில் உள்ள மக்களுடன் இணைந்த அமைச்சர் ரவி கருணாநாயக்கவே புனரமைப்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டின. மாற்று வீடுகள் வழங்கப்படும்வரை இதற்கு இடமளிக்கப் போவதில்லையென பிரதேசவாசிகள் கூறிவருகின்றனர்.
"இது அமைச்சுக்கு உட்பட்ட விடயம் என்பதால் அவர்களே இதனைத் தீர்க்க வேண்டும். அங்கு குடியிருக்கும் மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட வேண்டும்" என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
எரிபொருள் குழாய்களை மறுசீரமைக்கும் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தப்பட்டன. மீதொட்டுமுல்லை, புளூமென்டல் மற்றும் மஹாவத்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தமக்கு நஷ்டஈடு கோரி நடத்திய போராட்டத்தால் புனரமைப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. எனினும் இராணுவப் பாதுகாப்புடன் இந்தப் பணியை மீண்டும் ஆரம்பித்தோம். 140 மீற்றர் தூரமே பூர்த்தி செய்யப்படவுள்ளதாக ஜயவர்த்தன குறிப்பிட்டார்.
எரிபொருள் குழாய்களை மறுசீரமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்ட போதும் பேச்சு வார்த்தையையடுத்து நேற்று பிற்பகல் முதல் மீண்டும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டால் மின்சார உற்பத்திக்கு தடை ஏற்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment