தலிபான்களுடன் சமாதானப் பேச்சு நடாத்த அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவை கலைத்தார் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Saturday, July 27, 2019

தலிபான்களுடன் சமாதானப் பேச்சு நடாத்த அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவை கலைத்தார் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி

ஆப்கானிஸ்தானில் போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் தலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைத்த உயர்மட்ட குழுவை கலைத்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திவரும் தலிபான் இயக்கத்தினர் அந்நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அங்குள்ள சிறிய நீதிமன்றங்கள் மற்றும் வரிவிதிப்பு போன்றவற்றை நிர்வகித்துவரும் தலிபான் அமைப்பினர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக போட்டி அரசாங்கம் ஒன்றை தனியாக நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்த நடத்தி நாட்டில் சுமுகமான நிலையை கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய் கடந்த 2010ஆம் ஆண்டில் உயர்மட்ட அமைதி குழு ஒன்றை ஏற்படுத்தினார்.

இந்த குழுவின் முதல் தலைவராக நியமிக்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி புர்ஹானுதின் ரப்பானி கடந்த 2011ஆம் ஆண்டில் தலிபான்கள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அவரது மறைவுக்கு பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் சலாஹுதின் ரப்பானி, தேசிய இஸ்லாமிய முன்னணி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் சையத் அஹமத் கைலானி மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி முஹம்மது கரிம் கலிலி ஆகியோர் இந்த அமைதி குழுவில் இடம்பெற்று, நாடு முழுவதும் கிளை அலுவலகங்களை திறந்து தலிபான் தலைவர்களுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த குழுவை கலைத்து ஜனாதிபதி அஷ்ரப் கானி இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் அனைவரும் புதிதாக உருவாக்கப்பட்ட அமைதி சார்ந்த விவகாரங்கள் துறை அமைச்சகத்தில் இனி இணைக்கப்படுவார்கள் என ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் செதிக் செதிக்கி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment