முன்றாம் தரப்பு தலையீட்டுடன் கல்முனையை பறித்தெடுக்கும் செயற்பாட்டினை அனுமதிக்கமாட்டோம் - பிரதேச சபை உறுப்பினர் இஸ்மாயில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2019

முன்றாம் தரப்பு தலையீட்டுடன் கல்முனையை பறித்தெடுக்கும் செயற்பாட்டினை அனுமதிக்கமாட்டோம் - பிரதேச சபை உறுப்பினர் இஸ்மாயில்

றியாத் ஏ. மஜீத்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விவகாரம் முஸ்லிம்களுக்கு அநீதியாக வந்துவிடக் கூடாது என காரைதீவு பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் 17வது மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் (15) திங்கட்கிழமை காலை சபா மண்டபத்தில் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது. கல்முனை பிரதேச செயலக தரமுயர்வை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின பிரதேச சபை உறுப்பினர் ஜெயராணியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், கல்முனை பிரதேசத்தில் வாழும் 70 வீதமான முஸ்லிம்களுக்கு 29 கிராம சேவகர் பிரிவு காணப்படுவதுடன் 30 வீதமான தமிழ் மக்களுக்கு 29 கிராம சேவகர பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது இது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பெரும் அநீதியாகும்.

கல்முனை நகரில் 90 வீதமான வர்த்தக நிலையங்கள், கடைகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானவை. இந்த நகரப் பகுதியானது 3 தமிழ் கிராம சேவகர் பிரிவுகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் உள்ளுராட்சி வட்டாரப் பிரிப்பிலும் 12 ஆம் வட்டாரத்திற்குள் இம் மூன்று பிரிவுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது.

பெரியநீலாவணை கிராம சேவகர் பிரிவில் சுமார் 650 முஸ்லிம் குடும்பங்களும் 350 தமிழ் குடும்பங்களும் உள்ளன. ஆனால் இக்கிராம சேவகர் பிரிவு தமிழ் உப பிரதேச செயலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது.

கல்முனையில் வாழும் 70 சத வீதமான முஸ்லிம்களுக்கு 40 வீதமான நிலமும் 30 வீதமான தமிழ் மக்களுக்கு 60 வீதமான நிலமும் அமையப் பெற்றுள்ளது. முஸ்லிம்களின் வயல் காணிகள் கூட தமிழ் கிராம சேவகர் பிரிவுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கல்முனை வடக்கு தமிழ் உப செயலக உருவாக்கத்தின் போது பல அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ளன. இந்த அநியாயங்கள் சீர்செய்யப்பட்டு தமிழ், முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படாத வண்ணம் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் செய்யப்பட வேண்டுமே தவிர, முன்றாம் தரப்பு தலையீட்டுடன் பறித்தெடுக்கும் செயற்பாட்டினை அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment