மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக இன்று உயர் நீதிமன்றத்தில் 10 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசணைச் செயலணி, பேராசிரியர் சீ. குணரத்ன, கலாநிதி கே சேனரத்ன மற்றும் தற்போது வெலிகட சிறைச்சாலையில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சிலர் சட்டத்தரணிகள் ஊடாக குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், நீதிமன்ற அமைச்சர், நீதிமன்ற அமைச்சின் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர், வெலிகட சிறைச்சாலை கண்காணிப்பாளர் உட்பட பல தரப்பினரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் பலர் உள்ள நிலையில், போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு மாத்திரம் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தின் ஊடாக அரசியலமைப்பின் 12 (1) ஆம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்படுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே குறித்த தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் விதமான உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment