பல இழப்புகளை சந்தித்த தமிழ் மக்களின் போராட்டத்தை முஸ்லிம்கள் தலைமைகள் கொச்சைப்படுத்தி, எதிராக செயற்பட்டார்கள் எனவும் தமிழர்களுக்கு முஸ்லிம் தலைமைகளினால் எந்த நன்மையையும் கிட்டவில்லை எனவும் கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தபடுவதற்கு முஸ்லிம் தரப்பினர் நியாயமின்றி முட்டுக்கட்டை போடுகின்றனர் எனவும் குற்றம் சுமத்துகின்ற ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், முடிந்தால் தம்முடன் பகிரங்க விவாதத்திற்கு வந்து அவற்றை நிரூபிக்கத் தயாரா என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் சவால் விடுத்துள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்படி குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு பதிலளித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது "இவ்வேளையில் கடந்த கால சரித்திரங்கள் புரட்டிப் பார்க்கப்பட வேண்டும், சுதந்திரத்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழரசுக் கட்சி ஊடாகவே தமது அரசியலை முன்னெடுத்துள்ளனர்.
1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதற்கெதிராக தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து போராட்டங்களிலும் முஸ்லிம்கள் முன்னின்று பங்கெடுத்துள்ளனர்.
1957 ஆம் ஆண்டு திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழருக்கான சுயாட்சி மாநிலங்களாக பிரகடனம் செய்யப்பட்ட வேளையில் முஸ்லிம்களுக்கான சுயாட்சி எதுவென முஸ்லிம் பிரமுகர்களினால் கேள்வி எழுப்பப்பட்டபோது, மட்டக்களப்புக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசம் முஸ்லிம் சுயாட்சி அலகாக அமையும் என தந்தை செல்வா அறிவித்திருந்தார். அப்போது அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
தமிழ்- முஸ்லிம் சமூகங்களுக்குள் இவ்வாறான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்த போதிலும் தமிழ் பேசும் மக்கள் என்ற வரையரைக்குள் முஸ்லிம்களை கபளீகரமான முறையில் உள்வாங்கி, அடையாளப்படுத்தி வந்ததன் மூலம், இந்நாட்டில் முஸ்லிம்களும் ஒரு தேசிய இனம் என்பதை அடியோடு மறுத்து, முஸ்லிம் சுயநிர்ணய உரிமையை தமிழ் தலைமைகள் எப்போதும் மறுதலித்தே வந்துள்ளன.
தமிமீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் கூட முஸ்லிம்களை ஒரு தேசிய இனம் என்றில்லாமல் ஓர் இனக்குழுமம் என்றே பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். இதன்போது முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதற்கு பிரபாகரனுக்கு மனம் வரவில்லை என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
1980 களில் தமிழரின் ஆயுதப் போராட்டம் தொடங்கியதிலிருந்து முஸ்லிம்களும் அப்போராட்டத்திற்கு கணிசமான பங்களிப்பு செய்தே வந்துள்ளனர்.
தமிழரசுக் கட்சியில் முஸ்லிம் தலைமைகள் அங்கம் வகித்து, தமிழரின் சாத்வீகப் போராட்டங்களில் முன்னிலை வகித்தது போன்றே தமிழ்ப் போராட்ட இயக்கங்களின் படையணிகளில் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து போராடி, உயிர் நீத்திருப்பதை சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்..
ஆனாலும் காலப்போக்கில் தமிழ் இயக்கங்களினால் முஸ்லிம்கள் மீது வன்முறைகள், அக்கிரமங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டதையும் அவர்களது உயிர், உடமைகள் அழிக்கப்பட்டதையும் சொத்துக்கள் சூரையாடப்பட்டதையும் முஸ்லிம்களின் உரிமைகள், அபிலாஷைகள் யாவும் மறுக்கப்பட்டதையும் சுரேஷ் பிரேமச்சந்திரனால் மறுதலிக்க முடியுமா?
இவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான் முஸ்லிமகளுக்கான தனிக்கட்சியின் அவசியம் உணரப்பட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டு, இந்நாட்டு முஸ்லிம்களின் அரசியல் பயணம் தனித்துவமான புதுப்பாதையில் முன்னெடுக்க வேண்டியேற்பட்டது.
அதேவேளை இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது முஸ்லிம்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. அதன் மூலம் வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டது. முஸ்லிம்களின் இணக்கமின்றியே இலங்கை- இந்திய ஒப்பந்தமும் அதன் ஊடாக வடக்கு- கிழக்கு இணைப்பும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் முஸ்லிம்கள் இரவோடிரவாக பலமிழக்கச் செய்யப்பட்டு, சொந்த மண்ணிலேயே அவர்கள் அடிமையாக்கப்பட்டு, நசுக்கப்பட்டதை சுரேஷ் பிரேமச்சந்திரனால் மறுக்க முடியுமா?
அதன் பின்னர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் நேரடி உத்தரவில் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டனர். இது முழுமையான இனச்சுத்திகரிப்பாகும். வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள், தமிழ் மொழி பேசுவோராக இருந்தாலும் அவர்கள், தமிழ் சமூகத்தில் இருந்து வேறுபட்ட ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை நிரூபிக்க புலிகளின் இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை சிறந்த சான்றாகும்.
அவ்வாறே காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் புலிகளின் கிழக்குத் தளபதியாகவிருந்த கருணா அம்மான் தலைமையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அக்காலப்பகுதியில் ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தானை போன்ற கிராமங்களில் இரவு நேர ஆழந்த தூக்கத்தில் இருந்த முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்பட்டனர். புனித மக்கா சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு வந்த முஸ்லிம்கள் குருக்கள்மடத்தில் வைத்து கடத்திக் கொல்லப்பட்டனர்.
அத்துடன் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, ஓட்டமாவடி, மூதூர், கிண்ணியா என்று பல முஸ்லிம் ஊர்கள் மீது புலிகள் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு, நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்துள்ளனர். இவ்வாறான கொடுமைகள் கிழக்கு மாகாணத்தின் எந்த முஸ்லிம் ஊரில் அரங்கேற்றப்படாமல் இருந்திருக்கிறது. இவை தவிர முஸ்லிம்கள் நாளாந்தம் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் அவர்களது பொருளாதாரங்கள் அழிக்கப்பட்டும் கப்பம் அறவிடப்பட்டும் துன்புறுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இவ்வாறான இன அழிப்புக்கு மத்தியிலும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முஸ்லிம்கள் ஒருபோதும் காட்டிக்கொடுக்க வில்லை. இயக்க விரிசல்கள் காரணமாக பேரினவாத தூண்டுதல்களின் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான தமிழ் ஆயுதக் குழுக்களே அப்போராட்டங்களை காட்டிக்கொடுத்து, தமிழினத்திற்கு துரோகமிழைத்திருந்தன என்பதையும் அதில் ஓர் அங்கமே ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் என்பதையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மறந்து விட்டாரா?
அந்த வரிசையில் இறுதி வடிவமே கருணா அம்மான் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி, அரசாங்கத்தின் துணைக்குழுவாக மாறி, புலிகளின் முப்பது வருட போராட்டத்தை காட்டிக்கொடுத்து, ஆயிரக்கணக்கான புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் கூண்டோடு அழித்து, அஸ்தமிக்கச் செய்த அதியுச்ச துரோகத்தை, தமிழினம் அடுத்த ஜென்மத்திலும் மறக்க தயாரில்லை என்பதை சுரேஷ் பிரேமச்சந்திரன் அறியாதவரா?
ஆக, சரித்திர ரீதியாக தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, காட்டிக்கொடுத்து, துரோகமிழைத்தவர்கள் முஸ்லிம் தலைமைகளா அல்லது தமிழ் தலைமைகளா என்பதை சிறு பிள்ளையும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
ஈழப்போரின் இறுதிச்சமரில் கொல்லப்பட்டதாகவும் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்ற அப்பாவி தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோரால் இன்னும் ஜெனீவாவில் நீதி பெற்றுக் கொடுக்க வக்கில்லாத கையறு நிலையையில் இருப்பது என்? போர்க்குற்றம் புரிந்தவர்கள் இன்றும் எழுச்சி பெற்ற நிலையிலேயே இருக்கின்றனர்.
ஆனால் முஸ்லிம்களுக்கெதிரான புலிகளின் கொடுமைகளுக்கெதிராக முஸ்லிம் தரப்பு ஜெனீவாவை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம் யாதெனில், தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் நீதியை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே.
அரச தரப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜெனீவா சென்று தமிழ் மக்களுக்கெதிராக செயற்பட்டார் என்று கிறுக்குத்தனமாக குற்றஞ்சாட்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதிக்கட்ட ஈழப்போரில் தமிழினம் அழிக்கப்பட்டபோது தமிழ் அரசியல் தலைமைகள் கூட அஞ்சி மௌனித்திருந்த சூழ்நிலையில் மனிதப்படுகொலை பற்றியும் தமிழர் மீதான கொடுமைகள் பற்றியும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் மக்களுக்காக தைரியமாக உரத்துக் குரலெழுப்பிய முஸ்லிம் தலைவர் ரவூப் ஹக்கீம் என்பதை சுரேஷ் பிரேமச்சந்திரன் மறந்து விடக்கூடாது.
இன்று கூட தமிழ் சமுக்கத்தின் அரசியல் தீர்வுக்காக அனைத்து இடங்களிலும் குரல் எழுப்பி வருபவர் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
இந்த விடயங்களையெல்லாம் மறைத்து சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர், தமிழ் மக்களுக்காக முஸ்லிம் தலைமைகள் எதையும் செய்யவில்லை என்று கூறுவது அப்பட்டமான இனத்துவேசம் என்பதைத் தவிர வேறில்லை.
தமிழ் சமூகத்திற்கான அரசியல் தீர்வு விடயத்தை அணுவளவும் முன்னோக்கி நகர்த்த முடியாமல் இருப்பதற்கு அரசியல் ரீதியாக சுகபோகம் அனுபவிக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோரே காரணமாக இருக்கின்றனர் என்பதை தமிழினம் நன்கறிந்து வைத்துள்ளது.
தமது இயலாமையை மறைப்பதற்கு இவர்கள் முஸ்லிம் தலைமைகளின் மீது வீண் பழி சுமத்தி, புலம்புகின்றனர். இவ்வாறானவர்கள் கல்முனை தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையுள்ளவர்கள் போன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.
கல்முனை வடக்கு தமிழ் உப செயலக தரமுயர்த்தல் விடயம் என்பது இங்கு வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் பேசித்தீர்க்க வேண்டியதொரு பிரச்சினையாகும். இந்த விவகாரத்தில் வடக்கில் இருந்து வருகின்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர் எவ்வித தெளிவுமின்றி மூக்கை நுழைத்து, இரு சமூகத்தினரையும் குழப்ப எத்தனிப்பது கண்டனத்திற்குரிய விடயமாகும்.
சாய்ந்தமருது தவிர்ந்த கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில், அதாவது பொதுவான கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் 70 வீதமாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு 29 கிராம சேவகர் பிரிவுகளும் 30 வீதமாக வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் 29 கிராம சேவகர் பிரிவுகள் உருவாக்கப்பட்டிருப்பதும்,
பெரிய நீலாவணையில் சுமார் 665 முஸ்லிம் குடும்பங்களும் 325 தமிழ் குடும்பங்களும் உள்ள நிலையில் இக்கிராம சேவகர் பிரிவானது தமிழ் கிராம சேவை உத்தியோகத்தரின் கீழ் சட்டவிரோதமாகக் கொண்டு வந்து, அது கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுவதும், அதையும் தமது 29 கிராம சேவகர் பிரிவுகளில் ஒன்றாக காட்டுவதும்,
90 வீதம் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களை உள்ளடக்கிய கல்முனை மாநகர பஸார் பகுதியை தமிழ் கிராம சேவகர் பிரிவுக்குள் உள்ளீர்த்திருப்பதும் எந்த வகையில் நியாயமான செயற்பாடாக அமையும் எனக் கேட்க விரும்புகின்றேன்.
இவ்வாறு இன்னும் நிறைய அநீதியான விடயங்கள் கல்முனை பிரதேச செயலக பிரிப்பில் நடந்திருப்பதை சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர் அறிந்திருப்பார்களோ தெரியாது.
இப்படியொரு பிரதேச செயலகம் எமது நாட்டில் எங்குமே உருவாக்கப்பட்டிருக்கவில்லை. வவுனியாவில் தமிழ், சிங்களம் என மொழி ரீதியாக இரண்டு பிரதேச செயலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கல்முனையில் ஒரே மொழியைப் பேசுகின்ற மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் இரு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்னவென்று புரியவில்லை.
1992ஆம் ஆண்டின் அதிகாரங்கள் கையளிப்பு சட்டத்தின் அடிப்படையாக கிராம சேவகர் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் அதன் பின்னர் நிலத்தொடர்புள்ள ரீதியிலும் இனத்துவமற்ற ரீதியிலும் கல்முனையில் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற நகரங்கள் எவ்வாறு தமிழர்களுக்கான பூர்வீக நகரங்களாக இருந்து வருகிறதோ அவ்வாறே கல்முனை நகரமானது காலகாலமாக முஸ்லிம்களின் பூர்வீக நகராக இருந்து வருகிறது. அதனை கபளீகரம் செய்து, முஸ்லிம்களின் முகவெற்றிலையை இல்லாமலாக்க வேண்டும் என்கிற நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற சூழ்ச்சியை நாங்கள் புரியாதவர்களல்ல.
1988ஆம் ஆண்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த கே.டபிள்யூ.தேவநாயகம் தனக்கிருந்த அரசிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, யாரிடமும் கேட்காமல் இரவோடு இரவாக மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில் பிறந்த குழந்தையே கல்முனை தமிழ் உப செயலகமாகும்.
அப்போது வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபையானது ஈ.ஆர்.எல்.எப். இயக்கத்தின் வரதராஜப்பெருமாள் ஆட்சியின் கீழ் இருந்ததுடன் மறுபுறம் ஆயுத ரீதியில் புலிகளின் ஆட்சியும் கோலோட்சிய அக்காலகட்டத்தில் முஸ்லிம்கள் எவ்வித அரசியல், ஆயுத பலமுமின்றி அச்ச சூழ்நிலையில் நசுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கல்முனை முஸ்லிம்களுக்கு திட்டமிட்டு அநீதியிழைக்கும் வகையிலேயே அந்த தமிழ் உப செயலகம் உருவாக்கப்பட்டிருந்தமை வரலாறாகும்.
இவ்விடயங்களில் தெளிவற்ற நிலையில் இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் நுனிப்புல் மேய்வது போன்று முஸ்லிம்களை குற்றஞ்சாட்ட முற்படக்கூடாது என்று மிகக்காட்டமாக கூறி வைக்க விரும்புகின்றேன். உண்மையில் தமிழ் மக்களின் உரிமைக்காக செயலாற்றியிருந்தால் உங்களை அந்த மக்கள் நிராகரித்திருக்க மாட்டார்கள் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
தமிழரின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி, காட்டிக்கொடுத்து, துரோகமிழைத்தவர்கள் யார் என்று நான் மேலே சொன்ன வரலாற்றை எவ்வாறு மறுக்க முடியாதோ, அவ்வாறே முஸ்லிம்களுக்கும் அவர்கள் அநியாயம் செய்து, துரோகமிழைத்துள்ளனர் என்பதையும் கல்முனை தமிழ் உப செயலகம் அடாத்தாக உருவாக்கப்பட்டது என்பதையும் எவரும் மறுக்க முடியாது.
இவை தொடர்பில் எதிர்மறையான கருத்துகளைக் கூறி, முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்துகின்ற சுரேஷ் பிரேமச்சந்திரன், முடிந்தால் இவற்றை நிரூபிக்க தம்முடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சவால் விடுக்கின்றேன்" என்று கல்முனை முதல்வர் றகீப் தெரிவித்துள்ளார்.
Aslam S.Moulana
Mayor's Media Division
No comments:
Post a Comment