கிழக்கு மாகாணத் தமிழர்களை அரசியல் ரீதியாக குழப்புவதற்கும், கிழக்கு மாகாண தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதற்கும் சில கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேசத்தின் அனுசரணையுடன் எழுத்து மூலமான ஒரு உத்தரவு தமிழ் மக்களுக்கு கிடைக்குமாக இருந்தால் மாத்திரமே இன்னுமொரு சிங்களத் தலைவரை நம்பமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராடிய எமது சமூகம் இன்று இணைந்த வடக்கு கிழக்கை பெற முடியாத நிலை மாத்திரமல்லாது ஆகக்குறைந்தது தமிழர்களுக்கு ஒரு பிரதேச செயலகத்தைக்கூட தரமுயர்த்திப் பெறமுடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் 2011ஆம் ஆண்டு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தனர். 2021ஆம் ஆண்டு குடிசன மதிப்பீடு நடந்தால் நாங்கள் இரண்டாம் தரத்தில் இருப்போம் என்பது எனது நிலைப்பாடாகும்.
கிழக்கு மாகாணத் தமிழர்களை அரசியல் ரீதியாக குழப்புவதற்கும் கிழக்கு மாகாண தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதற்கும் சில கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன.
கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் வட மாகாண முன்னாள் முதலமைச்சரின் கட்சி முகாமிட்டிருந்தது. கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் முகாமிட்டிருந்தனர். அனந்தி சசிதரன் தலைமையிலான கட்சி முகாமிட்டிருந்தது. மனோ கணேசன் அடிக்கடி இங்கு வந்து அரசியல் செய்கின்றார்.
இதற்கும் மேலாக கிழக்குத் தமிழர்கள் ஒன்றாக இருக்க வேண்டுமென்று கிழக்குத் தமிழர் ஒன்றியம் ஒன்றிருக்கின்றது. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்று ஒன்று இருக்கின்றது. புதிதாக கிழக்குத் தமிழர் கூட்டணி என்று ஒன்று உருவாக இருக்கின்றது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 75 வீதமாக இருந்த தமிழ் மக்களுக்கு மூன்று பிரதிநிதித்துவமும் 25 வீதமாக இருந்த முஸ்லிம் மக்களுக்கு இரண்டு பிரதிநிதித்துவமும் கிடைத்தது. தமிழ் மக்களின் வாக்குகளை சிதைப்பார்களானால் 75 வீதமாக இருக்கின்ற தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவம் இரண்டாகவும் 25 வீதமாக இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கான பிரதிநிதித்துவம் மூன்றாகவும் மாறும் என்பதே இங்குள்ள நிலைப்பாடாகும்.
இதனை கருத்திற்கொண்டு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டில் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக கட்சி அரசியலை முன்னிறுத்தாமல் தமிழ் மக்களின் இருப்பை இங்கு உறுதிப்படுத்துவதற்காக அரசியல் செய்ய வேண்டுமே தவிர தமிழ் மக்களின் வாக்குகளை சிதைத்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கக்கூடாது.
ஜனாதிபதித் தேர்தல் வர இருக்கின்றது. யார் வேட்பாளர் என்பது புதிராகவே இருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை எந்தவொரு சிங்களத் தலைவர்களையும் நம்பக்கூடிய நிலையில் இல்லை. இறுதியாக நாங்கள் நம்பிய தலைவர்தான் மைத்திரிபால சிறிசேன.
சர்வதேசத்தின் அனுசரணையுடன் அவர்களின் ஒத்துழைப்புடன் அவர்களின் நடுநிலையுடன் எழுத்து மூலமான ஒரு உத்தரவு தமிழ் மக்களுக்கு கிடைக்குமாக இருந்தால் மாத்திரமே நாம் இன்னுமொரு சிங்களத் தலைவரை நம்பமுடியும்.
தமிழ் மக்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றோம். தமிழீழம் கேட்ட நாங்கள் வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அந்த நிலையில் நாங்கள் ஒன்றுபட வேண்டும்.
கிழக்குத் தமிழர்களின் வாக்குகளைப் பிரித்து இங்கு புதிதுபுதிதாக வந்து அரசியல் செய்ய எத்தணிப்பவர்கள் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். கிழக்குத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொண்டு எங்கள் கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினை காப்பாற்றுவதங்கு எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment