ஜனாதிபதித் தேர்தல் - செப்டெம்பரில் வர்த்தமானி வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Sunday, July 14, 2019

ஜனாதிபதித் தேர்தல் - செப்டெம்பரில் வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் மாத பிற்பகுதியில் வெளியிடுவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஜனவரி முதல் வாரத்தில் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்குமிடையிலான ஒரு சனிக்கிழமை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவைக் கோரும் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழுவே வெளியிடும். பதவியிலிருக்கும் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையிலேயே வர்த்தமானி அறிவித்தலை ஆணைக்குழுத்தலைவர் வெளியிடுவார். 

அதே சமயம், பதவியிலிருக்கும் ஜனாதிபதி தனது பதவிக்காலத்தின் நான்கு வருடங்களை நிறைவு செய்ததன் பின்னர், மீண்டும் மக்களாணையைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிப்பாரானால், அவர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவேண்டும். 

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்கும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை தீர்மானிப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்படும். வேட்பாளர்கள் தமது பிரசாரப்பணிகளை முன்னெடுப்பதற்கு ஐந்து வாரங்கள் ஒதுக்கிக் கொடுக்கப்படும். 

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கமைய ஐந்தாண்டுகளாகும். அதன் பிரகாரம் ஜனவரி 7ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடைகின்றது. 

பதவிக்காலம் பூர்த்தியாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படவேண்டும். 

ஜனாதிபதியின் பதவிக்காலம் தற்போது நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதால், அடுத்துவரும் 45 நாட்களுக்கிடையில் ஜனாதிபதி விரும்பினால், மக்களாணையைக் கோரித் தேர்தலுக்குச் செல்ல முடியும். 

இல்லாவிடில், அவரது பதவிக்காலம் முழுமைப்படுத்தப்பட்டதாகக் கருதி செப்டம்பர் இறுதி வாரத்துக்குள் தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடத் தீர்மானித்திருப்பதாக ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை ஆதாரமாகக்காட்டி நம்பகரமான ஆணைக்குழுவட்டாரம் தெரிவித்தது. 

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment