கோட்டாவுக்கு எதிராக களமிறங்க நான் தயார் - குமார வெல்கம அதிரடி - News View

About Us

About Us

Breaking

Monday, July 1, 2019

கோட்டாவுக்கு எதிராக களமிறங்க நான் தயார் - குமார வெல்கம அதிரடி

"நான் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரானவன். எனவே, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ள கோட்டாபயவுக்கு எதிராகக் களமிறங்க நான் தயாராக இருக்கின்றேன். அதற்கான வாய்ப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கினால் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். மக்களின் ஆதரவு என்றும் எனக்கு இருக்கும். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் வகையிலேயே இனிமேல் என் அரசியல் பயணம் தொடரும்."

இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவருடனான நேர்காணல் வருமாறு:-

கேள்வி:- ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பதுளை மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டுள்ளீர்களா?

பதில்:- ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சி உறுப்புரிமையை நான் இன்னும் பெறவில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே அங்கம் வகிக்கின்றேன். எனவே, அங்கத்தவர் அல்லாத ஒருவரை எந்த அடிப்படையில் பதவி நீக்கம் செய்யமுடியும்?

கேள்வி:- உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குச் சார்பாக பதுளை மாவட்டத்தில் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளீர்கள். அப்படியானால் எந்த அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் எனக் கூறுகின்றீர்கள்?

பதில்:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கொள்கை ரீதியில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் காரணமாகவே பொது எதிரணிக்குச் சார்பாகச் செயற்பட்டேன். அது மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய தற்காலிக உதவியாகும். அவர் எனது நெருங்கிய சகாவாகும். 

கேள்வி:- கோட்டாபய ராஜபக்சவுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி களமிறக்கினால் அந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவீர்களா?

பதில்:- கோட்டாபய ராஜபக்சவே போட்டியிடுவார் என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் அவருக்கு எதிரானவன். எனவே, அவர் போட்டியிடும் தீர்மானத்துக்கு நான் உடன்படவில்லை. அதனாலேயே எனது மனச்சாட்சியின் பிரகாரம் செயற்படத் தீர்மானித்துள்ளேன். வேறு வேட்பாளர் களமிறங்கினால் அது குறித்து சிந்திக்கலாம்.

கேள்வி:- உங்கள் எதிர்கால அரசியல் பயணம்?

பதில்:- நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர். எனவே, பழைய அங்கத்தவர்களையும் இணைத்துக்கொண்டு முன்நோக்கிப் பயணிப்பேன்.

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, மீண்டும் அவருடன் இணைய முடியுமா?

பதில்:- கட்சித் தலைவர் என்பதற்காக எல்லா விடயங்களுக்கும் தலையாட்ட முடியாது. மனச்சாட்சியின் பிரகாரமே விமர்சனங்களை முன்வைத்தேன். மஹிந்த ராஜபக்சவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பிரதமர் பதவியை வாங்க முடியும் என்றால், என்னால் ஏன் இணைந்து செயற்பட முடியாத சூழ்நிலை ஏற்படும்?

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை உங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கினால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா?

பதில்:- ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ள கோட்டாபயவுக்கு எதிராகக் களமிறங்க நான் தயாராக இருக்கின்றேன். அதற்கான வாய்ப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கினால் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். மக்களின் ஆதரவு என்றும் எனக்கு இருக்கும். எனவே, மக்கள் ஆதரவு அலையை என்னால் திரட்ட முடியும் என்பதை உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

charles ariyakumar jaseeharan

No comments:

Post a Comment