நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி நடைபெற்றிருந்தால் தொடர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்காதென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியுடன் பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இணைந்து பயணித்தோம்.
இதன்போது நாட்டை கட்டியெழுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோதே ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாதென கூறி திடீர் மாற்றத்தை ஜனாதிபதி ஏற்படுத்தினார்.
அதாவது, மஹிந்த ராஜபக்ஷவிடம் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அதிகாரத்தை வழங்கினார். இதன்போது ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான நாளையும் அறிவித்திருந்தார்.
அவ்வாறு நடந்திருந்தால் எப்போதோ ஐக்கிய தேசியக் கட்சி வீட்டுக்கு சென்றிருப்பதுடன் மஹிந்தவின் ஆட்சி நாட்டில் நிலவி இருக்கும்.
அதனைத் தொடர்ந்து மஹிந்தவினால் நடத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டங்களிலேயே சஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுக்களின் பெயர்களும் வெளிவந்திருக்கும். பயங்கரவாத தாக்குதல்கள் தடுக்கபபட்டிருக்கும்.
இதேவேளை கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு செயற்பட்டது என்பதற்கு பதிவு செய்யப்பட்ட சான்றுகள் உள்ளன.
அந்த வகையில் எது எவ்வாறாயினும் அரசியலமைப்புக்கு அமைய இந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்” என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment