விமான கட்டணங்களை குறைக்குமாறு ஸ்ரீலங்கன் சேவைக்கு பிரதமர் பணிப்பு - சுற்றுலாத்துறை இழப்பை ஈடுசெய்யவும் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, July 1, 2019

விமான கட்டணங்களை குறைக்குமாறு ஸ்ரீலங்கன் சேவைக்கு பிரதமர் பணிப்பு - சுற்றுலாத்துறை இழப்பை ஈடுசெய்யவும் நடவடிக்கை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சீர்செய்யும் ஒரு நடவடிக்கையாக விமான கட்டணங்களைக் குறைக்குமாறு ஸ்ரீலங்கன் விமான சேவைக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

வாராந்தம் இடம்பெறும் அபிவிருத்தி கூட்டம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்படி பணிப்புரையை விடுத்ததாகத் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுதர்ஷன குணவர்தன தெரிவித்தார். 

அமைச்சர்கள் சாகல ரத்னாயக்க, ஜோன் அமரதுங்க, திலக் மாரப்பன, ஹர்ச டி சில்வா, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரசிங்க மற்றும் திறைசேரி, மத்திய வங்கி, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கை சுற்றுலாச் சபை ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் பலர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றினர்.

தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அதன் விமானக் கட்டணத்தைக் குறைத்தால் மற்றைய விமான சேவைகளும் அதேபோன்று கட்டணத்தைக் குறைக்க வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்வதற்கு நிலத்தில் கையாளும் செலவுகள் டில்லியில் இருக்கும் அளவுக்கு குறைக்கப்பட வேண்டும். 

அத்துடன் விமான எரிபொருள் கட்டணம் அடுத்து ஆறு மாதங்களுக்குள் குறைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அங்கு கூறினார். இதற்கு கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. நிலத்தில் கையாளும் செலவுகளைக் குறைப்பது தேவையான ஒன்றாகும். அப்போதுதான் நமது நாடு ஒரு சுற்றுலா மையமாக கருதப்பட முடியும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி விமான டிக்கட் கட்டணங்களைக் குறைப்பதற்கும் நிலத்தில் கையாளும் செலவுகளை மற்றும் எரிபொருள் கட்டணங்களை மாற்றியமைக்கவும் இணக்கம் காணப்பட்டது. அத்துடன் மறுசீரமைத்து அதனை 40 அமெரிக்க டொலர் என்ற அளவுக்குக் கொண்டு வருவதென்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட பரிந்துரைகள் தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று பிரதமரினால் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதேநேரம் ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இந்தியாவில் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்து உடனடியாகப் பிரசாரமொன்றை ஆரம்பிக்கவும் இக்கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

சுற்றுலா ஊக்குவிப்புக்காக சுற்றுலா செயற்பாட்டாளர்களுக்கு அவசர நிதி உதவி வழங்கப்படும். தற்போது 150 மில்லியன் ரூபாய் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தில் இதற்காக தூக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், இந்த நிதி முறையாக செலவிடப்படவேண்டும் என்று பிரதமர் அங்கு சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளில் 43 பேர் நஷ்டஈடு பெறுவதற்கு தகுதி பெற்றவர்களாக இருந்த போதும் ஒரேயொரு ஜப்பானிய சுற்றுலாப் பயணி மாத்திரமே நஷ்டஈடு பெறுவதில் ஆர்வம் காட்டியிருப்பதாக சுதர்ஷன குணவர்த்தன இங்கு தெரிவித்தார்.

அதேநேரம், மினுவாங்கொடையில் இனமுறுகல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வார இறுதி முதல் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

விருந்தோம்பல் துறைக்கு அரசாங்கம் பல்வேறு வசதிகளை வழங்கவுள்ள போதிலும் வங்கிகள் போதிய ஆதரவு வழங்காமல் பொறுப்பாளர் ஒருவரை உறுதி வழங்குமாறு கேட்டு வருவதாக தெரிய வருகிறது. 

இது தொடர்பாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் எரன் விக்ரமரட்னவுக்குப் பணிப்புரை விடுத்த பிரதமர், நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகளுடன் கலந்துரையாடி ஒரு வாரத்துக்குள் உறுதியான தீர்வினைக்காண முயற்சிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment