முஸ்லிம் அமைச்சர்கள் அரசுக்குக் கொடுத்த ஒருமாத காலக்கெடு நாளை மூன்றாம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் தமது அடுத்த கட்டநகர்வு குறித்து எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை கூடி ஆராயவிருப்பதாக சிரேஷ்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி நேற்று தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகம் சமீபகாலமாக எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள், சவால்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கடந்த மாதம் மூன்றாம் திகதி அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் அரசுக்கு காலக்கெடு விதித்து தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர்.
இதற்கிடையில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்க முன்வர வேண்டுமென மகாசங்கத்தினர்களும் ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு மதிப்பளித்து கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ ஹலீம், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் இருவரும் மீண்டும் பதவியேற்றுக்கொண்டனர்.
இருந்த போதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எடுக்கும் எத்தகைய முடிவுக்கும் தாங்கள் கட்டுப்படுவதாக அவர்கள் அறிவித்திருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்குக் கொடுத்த காலக்கெடு நாளை மூன்றாம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸியிடம் கேட்கப்பட்டபோது, நாம் அவசரப்படுவதற்கில்லை. எதிர்வரும் 10ஆம் திகதி அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்து அடுத்தகட்ட நகர்வு குறித்துத் தீர்மானிப்போம்.
இதேவேளை, பௌசி தலைமையில் சில முக்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேசவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சுப் பதவிகளை ஏற்பது தொடர்பாகவும், எதிர்வரும் 7ஆம் திகதி கண்டியில் பொதுபலசேனா அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்படவிருப்பதாக அறியவருகின்றது.
ரிஷாத் பதியுதீன் எம்.பி. மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படாமையும், பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் அவர் அளித்த சாட்சியம் இதனை நிரூபித்திருப்பதாகவும் முஸ்லிம் பாராளுமன்ற குழு தெரிவித்திருக்கின்றது.
இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்து முஸ்லிம் எம்.பி.க்கள் குழு அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment