பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுகின்ற ஒருவர் மக்களின் கனவுகளை நனவாக்காது தமது கனவை நனவாக்க ஆரம்பித்து விடுகின்றார் - News View

About Us

About Us

Breaking

Monday, July 1, 2019

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுகின்ற ஒருவர் மக்களின் கனவுகளை நனவாக்காது தமது கனவை நனவாக்க ஆரம்பித்து விடுகின்றார்

மக்களுக்கு தேவையானவற்றை செய்வோம் எனக் கூறி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் ஒருவர் அதன் பின்னர் மக்களது நலன்களையும் அவர்களது கனவுகளையும் கைவிட்டு தமது நலன்களையே முன்னிறுத்தி செயற்படுகிறார்.

இவ்வாறான நிலை காணப்பட்டால் எவ்வாறு இந்நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்? அல்லது எம்மிடையே எவ்வாறு சமாதானம் உருவாகும் என வீடமைப்பு அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்தார்.

211 ஆவது மாதிரி கிராமமாக மன்னாரில் அமைக்கப்பட்ட 'குறிஞ்சி நகர்' கிராமத்தை திறந்து வைத்து மக்களிடம் கையளித்த பின்னர் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், நாங்கள் நல்ல வீட்டில் வாழ வேண்டும். எங்கள் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும். நாங்கள் முன்னுக்கு வர வேண்டும் என்ற பல்வேறு கனவுகளுடன் நீங்கள் அனைவரும் இங்கே வந்துள்ளீர்கள்.

தேர்தல் காலங்களில் உங்கள் கையினை மையில் நனைத்து ஒருவரை உங்களுக்கான தலைவராக தெரிவு செய்கின்றீர்கள். ஏன் உருவாக்குகின்றீர்கள்? இப்படியான கனவுகளை நனவாக்குவதற்கு, உங்கள் சார்பாக செயற்படுவதற்கு ஒரு தலைவன் வேண்டும் என்பதற்காக தெரிவு செய்கின்றீர்கள்.

ஆனால் அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற தலைவர்கள் என்ன செய்கின்றார்கள்? நாங்கள் அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் என பொய் வாக்குறுதி வழங்குகின்றனர்.

உங்களுடைய வாக்ககளின் மூலம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுகின்றார். ஆனால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் மக்களின் கனவுகளை நனவாக்காது தமது கனவை நனவாக்க ஆரம்பித்து விடுகின்றார்.

தனது மனைவி, உறவினர், சொந்தக்காரர்களின் கனவுகளை நனவாக்குகின்றார். இப்படியான கனவுகளை நனவாக்கியவர்கள் கடந்த அரசாங்கத்திலே காணப்பட்டார்கள். மக்களுக்கு வர வேண்டிய வரப்பிரசாதங்களை மொத்தமாக சுறுட்டிக்கொண்டு பங்கிட்டார்கள். 

இப்படி இருக்கின்ற போது இந்த நாடு எப்படி அபிவிருத்தி அடையும்? எங்கள் மத்தியில் எப்படி சமாதானம் உருவாகும்? இந்த நாடு எப்படி சரியான முறையில் வலுவூட்டப்படும்? சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்காக உங்கள் கையினை மையில் நனைத்து ஒருவரை தெரிவு செய்கின்ற போது ஒரு தடவை அல்ல பல தடவை சிந்தித்து பாருங்கள்.

தெரிவு செய்யப்படுகின்றவர் உங்களுக்காக எதனை செய்தார் என்று. எனவே கடந்த காலங்களில் ஏற்பட்ட அந்த சம்பவங்கள் உண்மையிலேயே எங்களுக்கு ஓர் பாரிய இழப்பாகவே காணப்படுகின்றது.

காலம் சென்ற முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ வழியில் நான் உங்களுக்கு உங்கள் அனைவருடைய கனவுகளையும் எதிர் காலத்திலே ஏற்படுத்தித் தருவேன் என்றார்.

மன்னார் குறூப் நிருபர்

No comments:

Post a Comment