ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்பவர்கள் தொடர்பாக தமக்கு கவலையில்லையென மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீண்டும் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டமையானது, தமக்கு எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாம் என்றும் எதிரணியாக கருதியதே கிடையாது. இந்தக் கட்சியிலிருந்துதான் நாம் அனைவரும் இந்த இடத்திற்கு வந்துள்ளோம்.
எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அடுத்த தேர்தலில் கூட்டணி அமைத்துக் கொண்டு களமிறங்க வேண்டும் என்றே நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள முடியாது. இது இரண்டும் பாம்பும், கீரியும் போன்ற கட்சிகள். ஆனால் சுதந்திரக் கட்சியினருக்கு, எம்முடன் இணைவதில் எந்த சிக்கலும் இருக்காது என்பதே எமது கருத்தாகும்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம மீண்டும் சுதந்திரக் கட்சிக்கு சென்றமையானது எமக்கு பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும்.
2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவி இல்லாது போனது. அப்போது, அவர் அலரி மாளிகையிலிருந்து வெளியேறுகையில், அவருடன் 10 வருடங்களாக உடனிருந்த அமைச்சர்கள், புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்கள்.
இவ்வாறு பிரிந்தவர்கள், தற்போது எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதைத்தான் கேட்க விரும்புகிறேன். எனவே, எமது தரப்பிலிருந்து வெளியேறுபவர்கள் தொடர்பாக கவலையடையத் தேவையில்லை” என மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment