ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவையில் இடம்பெற்ற ஊழல் அறிக்கை தம்மிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது, விரைவில் அது பாராளுமன்றத்திலும் மக்களிடமும் வெளிப்படுத்தப்படும் - ஜனாதிபதி - News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, July 2, 2019

demo-image

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவையில் இடம்பெற்ற ஊழல் அறிக்கை தம்மிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது, விரைவில் அது பாராளுமன்றத்திலும் மக்களிடமும் வெளிப்படுத்தப்படும் - ஜனாதிபதி

65776077_10157085969316327_6958803903873810432_n
ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா  விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று தம்மிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் அங்கு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைக்கேடுகள் பற்றிய சகல விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், விரைவில் அது பாராளுமன்றத்திலும் மக்களிடமும் வெளிப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன் எனவும் எந்தவொரு தனி நபரையும் பாதுகாப்பதற்காக அல்ல எனவும் தெரிவித்த ஜனாதிபதி, ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து மட்டங்களிலும் முன்னெடுப்பதே தனது நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

இன்று (02) பிற்பகல் பொலன்னறுவை, ஸ்ரீபுர மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மகாவலி குடியேற்றவாசிகளுக்கு 8,000 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளும் கோடிக்கணக்கான நிதி மோசடிகள் முதல் ஏழை விவசாயிக்கு காணியுறுதியை வழங்கும்போது தமது பைகளை நிறைத்துக்கொள்ள முயற்சிப்பவர்கள் வரையானோரை தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் இவ் அனைத்து வகையான ஊழல், மோசடிகளையும் ஒழிப்பதற்காகவே 2015ஆம் ஆண்டு தேர்தலில் சுமார் 6,250,000 மக்கள் ஜனாதிபதி தேர்தலின்போது தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர் என தெரிவித்தார்.
65929821_10157085968556327_5895356858784284672_n
ஊழல், மோசடிகளை இல்லாதொழித்து நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது தன்னை பதவியில் அமர்த்த உதவியவர்களைப் போன்றே எதிர்க்கட்சியில் உள்ளவர்களும் தமக்கு எதிராக உள்ளனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஆளுங்கட்சியா? எதிர்க்கட்சியா? என்ற பேதம் தனக்கில்லை எனவும் அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் இன்று ஆளுங்கட்சியில் உள்ளவர்களைப் போன்றே எதிரக்கட்சியில் உள்ளவர்களும் தம்மை குறைகூறுவதற்கான காரணம் ஊழல், மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு தான் முன்னெடுக்கும் வேலைத்திட்டமே எனவும் தெரிவித்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பிலும் இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இன்று அந்த விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையே அடிப்படையாக அமைந்துள்ளது என தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பதுடன், அந்த சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களின் பட்டியலில் தனது பெயரும் உள்ளடக்கப்பட்டிருப்பதற்கு தான் இந்த நாட்டில் கட்டியெழுப்பிய சுதந்திரமும் ஜனநாயகமுமே காரணமாகும் என்பதை சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, உயர் நீதிமன்றமானது பக்கச்சார்பின்றி செயற்பட்டு வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் ஏற்றுக்கொள்வதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இவ்வனைத்து செயற்பாடுகளிலும் சுயாதீன ஆணைக்குழுக்கள் பலப்படுத்தப்பட்டிருப்பதுடன், உண்மையான விடயங்களை அறிந்து கொள்ளாது சிலர் தன்மீது குறைகூறுவதாகவும் சகல தடைகளுக்கு மத்தியிலும் நாட்டுக்கான தமது பொறுப்பினை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
66153499_10157085969331327_16342715633500160_n
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தன்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதனை நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும் என தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தற்காரர்களின் பின்னால் நீதிமன்றங்களுக்கு செல்லும் அரச சார்பற்ற நிறுவனங்களால் தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரசாரங்களையும் நாட்டுக்கு எதிரான உடன்படிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களையும் கவனத்திற்கொள்ளாது நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புதல் தொடர்பில் மாத்திரமே தான் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து இலங்கையர்களுக்கும் காணி உரிமை மற்றும் வீட்டிற்கான உரிமையை பெற்றுக்கொடுக்கும் கொள்கைக்கமைய மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் செயற்திட்டம் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஆரம்பமானதுடன், வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்திட்டம் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. காணி உறுதி வழங்குதலை அடையாளப்படுத்தும் முகமாக சில குடியேற்றவாசிகளுக்கு ஜனாதிபதி இதன்போது காணி உறுதிகளை வழங்கினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, அனோமா கமகே, இசுர தேவப்பிரிய, சாமர சம்பத் தசநாயக்க, பீ.தயாரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
65638259_10157085970001327_3927552995813752832_n
65849464_10157085971276327_5217444353269563392_n

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *