முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களிலிருந்து அவர் விடுவிக்கப்படுவதாக பாராளுமன்றத் தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ள நிலையில், முடியுமானால் அவருக்கு அமைச்சுப் பதவி கொடுத்துப் பார்க்கட்டும் எனத் தாம் அரசாங்கத்திடம் சவால் விடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அமைச்சுப்பதவி வழங்கப்படுமானால் நாடு முழுவதும் உண்ணாவிரதத்தில் ஈடுபட நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ச.தொ.ச வாகனத்தைச் சட்டவிரோதமாகப் பயங்கரவாத செயல்களுக்கு வழங்கினார் என்பது உட்பட பல குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக தாம் பொலிஸ் திணைக்களத்தில் பல முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான முறைப்பாடுகளை 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்து முடிக்க இயலாது என்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு அதனால்தான் அவரை குற்றங்களிலிருந்து விடுவிப்பதாக குறிப்பிட்டுள்ளது என்றும் அதுரலியே ரதனதேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்கினால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரரேரணையை புதுப்பித்துப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். அதே நேரம் அவருக்கெதிராக முழு நாட்டையும் உண்ணாவிரதத்துக்காக அணி திரட்டுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
19 அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள அவர் அதனை முழுமையாக இல்லாதொழிக்கும்படி எவரும் கூறவில்லை. அது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி சில சரத்துக்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
இந்தப் பாராளுமன்றத்தில் அல்லது அடுத்த பாராளுமன்றத்திலாவது திருத்தப்பட்ட சரத்துக்களோடு மீண்டும் அதை நிறைவேற்றி பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment