இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 5 இனாலும் சுப்பர் டீசல் ரூபா 5 இனாலும் குறைக்கப்பட்டுள்ளதோடு, ஒட்டோ டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என, நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைந்ததையடுத்து, குறித்த நிவாரணத்தை பாவனையாளர்களுக்கு வழங்கும் பொருட்டு குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பலதடவைகள் எரிபொருளின் விலை உயர்வடைந்தும் குறைவடைந்தும் மாற்றமடைந்த போதிலும், தற்போது எரிபொருளின் விலை இவ்வரசாங்கம் ஆட்சிக்கு வந்த வேளையில் இருந்த எரிபொருள் விலையிலும் பார்த்த குறைவாகவே காணப்படுவதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2015 ஜனவரி முதலாம் திகதி ரூபா 150 ஆக விற்கப்பட்ட ஒக்டேன் 92 பெற்றோல், இன்று ரூபா 136 இற்கும், ரூபா 111 ஆக விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசலின் தற்போதைய விலை ரூபா 104 இற்கும் சந்தையில் விற்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலை திருத்தம் அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, மாதாந்த விலை மறுசீரமைப்புக்கு அமைவாக, கடந்த ஜூன் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டன.
இதன்போது பெற்றோல் ஒக்டேன் 92 மாத்திரம் ரூபா 3 இனால் அதிகரிக்கப்பட்டன.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) எரிபொருள் விலைகள்
- பெற்றோல் Octane 92 - ரூபா 138 இலிருந்து ரூபா 136 ஆக ரூபா 2 இனாலும்
- பெற்றோல் Octane 95 - ரூபா 164 இலிருந்து ரூபா 159 ஆக ரூபா 5 இனாலும்
- ஒட்டோ டீசல் - ரூபா 104 (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 104 ஆக ரூபா 1 இனாலும்
- சுப்பர் டீசல் - ரூபா 136 இலிருந்து ரூபா 131 ஆக ரூபா 5 இனாலும் குறைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment