யாழ். 5G அலைவரிசை வேண்டாம் என கூறி யாழ். மாவட்டத்தில் உள்ள 15 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் கவனயீர்ப்பு போராட்மொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேற்படி 5G அலைவரிசை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சநிலை குறித்து யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் கடந்த 9ஆம் திகதியும் கடந்த 13ஆம் திகதியும் கூடி ஆராய்ந்துள்ளனர்.
இதனடிப்படையில் இந்த பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
மேற்படி மக்கள் இயக்கம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து கூறும்போதே மேற்படி போராட்டம் தொடர்பான தகவலை கூறியுள்ளனர்.
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அமைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான கம்பங்கள் தற்போது வட மாகாணம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்த கம்பங்களில் 5G அலைவரிசை பொருத்தப்படவுள்ளதாக மக்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அந்த கம்பங்களில் 5G அலைவரிசை பொருத்தப்படாது என்பதற்கு அப்பால் அது நாட்டப்படும் விதம் மற்றும் அதனை நாட்டுவதற்கு மக்களிடம் கூறப்படும் பொய்கள் சந்தேகத்தை உண்டாக்குகின்றன என்றும் அந்த அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் சாதாரணமாக பொது பயன்பாட்டு வீதிகளில் இவ்வாறு கம்பங்கள் அமைக்கப்படும்போது அவை தொடர்பாக பல திணைக்களங்களிடம் அனுமதி பெறப்படவேண்டும். ஆனால் இவர்களிடம் எந்தவொரு அனுமதியும் கிடையாது. அப்படி இருக்கையில் குறித்த திணைக்களங்கள் வாய் மூடி இருப்பது ஏன்? என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அதற்கு காரணம் இந்த கம்பங்கள் அமைக்கப்படுவதற்கு பின்னால் பல பண முதலீட்டாளர்களும் ஒப்பந்தங்களும் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment