மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பன்னிரண்டு அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் நேற்று (01) தாக்கல் செய்யப்பட்டன.
ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள மரண தண்டனைத் தீர்ப்புகளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகர் நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடைவிதிக்குமாறு கோரியே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி கவிந்து ஹேவா கீகனகே உள்ளிட்ட பன்னிரண்டு பேர் இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
சட்ட மா அதிபர், நீதியமைச்சர், சிறைச்சாலைகள் ஆணையாளர், வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தூக்கிட்டு மரண தண்டனை வழங்குவது கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனையாகும். பல்லின சமூகங்கள் மற்றும் பல மதத்தவர்கள் வாழும் நாட்டுக்கு இது பொருத்தமற்றது என மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் கடந்த 43 வருடங்களுக்கு மேலாக தூக்கிலிட்டு எவருக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது அரசியலமைப்பின் 11ஆவது மற்றும் 12ஆவது சரத்தின் கீழ் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட ஒரு தரப்பினரை மாத்திரம் தெரிவு செய்திருப்பது ஒருதலைப்பட்சமானது, நியாயமற்றது, ஒருவரை அடையளாம் காணக்கூடிய நடைமுறை இல்லை என சட்டத்தரணி கவிந்து கீகனகே தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சகலருக்கும் சட்டம் சமமானதாக இருக்க வேண்டும், அரசியலமைப்பின் 34 (1) சரத்தை இது மீறும் வகையில் அமைந்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மரண தண்டனையை செயற்படுத்துவதை கைவிடுமாறு கோரி, தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை ஆராய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கோத்தாகொட தலைமையில், ஐந்து நீதியசர்கள் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, இன்று பிற்பகல் 11:30 க்கு ஆராய்வதற்காக எடுத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment