ரமழானில் பெற்றுக் கொண்ட ஆத்மீகப் பயிற்சியை சமூக அனுபவங்களுடன் தொடருவோம் - பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 4, 2019

ரமழானில் பெற்றுக் கொண்ட ஆத்மீகப் பயிற்சியை சமூக அனுபவங்களுடன் தொடருவோம் - பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா

ஐ. ஏ.  காதிர் கான் 
ரமழானில் பெற்றுக்கொண்ட ஆத்மீகப் பயிற்சி மற்றும் பொறுமை போன்றவற்றை, நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை கருதி தொடர்ந்தும் பேணுமாறு, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் தொடர்ந்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இறை திருப்தியை நாடி, புனித ரமழான் முழுவதும் நோன்பு நோற்று, நல்லமல்களில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு நாட்டின் இன்றைய நிலைமை, ஒரு சோதனைக் களமாகவே உள்ளது. இஸ்லாத்தில் இல்லாத ஒரு கோட்பாட்டுக்காக ஒரு சில கொடியவர்கள் செய்த ஈனச் செயல், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விபரீதமாய் உள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான சில தீய சக்திகள், நாட்டின் இன்றைய சூழலை முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்த முயற்சிப்பது பெரும் வேதனை அளிக்கின்றது. எனவே, இச்சக்திகளின் தீய சதிக்குள் சிக்காது முஸ்லிம்கள் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும். 

எதிர்வரும் காலங்கள் தேர்தல்களை எதிர்நோக்குவதால், இனவாத அரசியல்வாதிகள் சமூக மோதல்களைத் தூண்டி, அரசியல் இலாபம் அடைய சந்தர்ப்பம் பார்த்துள்ளனர். இந்த ஆபத்தான நிலைமைகளை இல்லாது ஒழிக்க முஸ்லிம்களிடம் பொறுமை அவசியம். 

சாந்தி, சமாதானம், பொறுமை, பணிவு, விட்டுக்கொடுப்பு, மானுட தர்மங்களுக்கு மிகப்பெறுமதியான இடமளித்துள்ள இஸ்லாம் சமூக மோதல்களைத் தூண்டி, மனித அழிவுக்கு வித்திட்டதாக சரித்திரம் இல்லை. ஆகவே, அழிவுகளை ஏற்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முனையும் வங்குரோத்து அரசியல்வாதிகளின் திட்டங்களைத் தோற்கடிக்க, முஸ்லிம் சமூகம் புனித ரமழானில் பெற்றுக்கொண்ட ஆத்மீகப் பயிற்சி, சமூக அனுபவங்களுடன் ஒன்றிணைய வேண்டும். 

இந்நிலையில், முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான அநீதிகளைத் தட்டிக் கேட்கும் அமைச்சர் ரிஷாத், ஆளுநர் அஸாத் சாலி ஆகியோரின் சமூகக் குரல்களைப் பலப்படுத்த முஸ்லிம்களின் ஒற்றுமை அவசியமாகவுள்ளன.

இதேவேளை, எவ்விதக் காரணங்களும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் கைதாகி, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்கு, இப்பெருநாள் தினத்தில் எல்லாம் வல்லவன் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக! அத்துடன், உரிய சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கும் இந்நன்நாளில் அனைவரும் ஒன்றிணைவோமாக!

No comments:

Post a Comment