எதிர்பாராத விதமாக சவால்களையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்துக்கொண்டிருக்கின்ற இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில், நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமூகம், தமது விடிவுக்காக அல்லாஹ்விடம் பிராத்திக்க வேண்டும் என, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்பாராத விதங்களிலெல்லாம் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
அத்துடன், இனவாதக் கும்பல்களின் தாக்குதல்களுக்கு பள்ளிவாசல்கள், இருப்பிடங்கள், உடமைகள், சொத்துக்கள் என்பன இரையாகின. இத்தனைக்கும் மத்தியில், புனித ரமழான் நோன்பும் முஸ்லிம்களுக்கு மத்தியில் வந்ததால், முஸ்லிம்கள் அதில் மிகப் பொறுமையுடன் இருந்து நோன்பு வைத்தனர்.
சிலர், இந்நோன்பை வீடுகளில் நோற்க, மற்றும் சிலர் சிறைக்கூடங்களில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். எவ்விதப் பாவங்களும் அறியாத, எந்தக் குற்றங்களும் புரியாத முஸ்லிம்களில் பலர் இன்றும்கூட இன்னும் நோன்பு நோற்க முடியாமல் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.
வரலாற்றில் முன்னெப்போதுமில்லாதவாறு, முஸ்லிம்கள் இவ்வாறு இம்முறை கஷ்டத்துடனும் கவலையுடனும் நோன்பைக் கழித்தனர். ஆனால், நிச்சயமாக இதற்கு அல்லாஹ்விடத்தில் கூலி உண்டு. "இறைவன் எம்முடன் எப்பொழுதும் இருக்கின்றான்" என்ற உறுதியான நம்பிக்கை எம்மிடையே வரவேண்டும்.
"நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளருடன் இருக்கின்றான்" என்று, அல்லாஹ் திருமறையில் கூறியிருக்கின்றான். எனவே, இந்தப் பொறுமை முஸ்லிம்களிடம் இப்பொழுதும் எப்பொழுதும் வரவேண்டும். முஸ்லிம்களை அல்லாஹ் சோதிக்கின்றான் என்று நாம் எண்ணிவிடக்கூடாது.
எமது சிறந்த ஆயுதம், துஆப் பிரார்த்தனையாகும். இந்தப் பிரார்த்தனையைக் கொண்டு, எமது எதிர்கால சிறப்பியல்பு வாழ்க்கையை நிச்சயம் அடைந்துகொள்ள முடியும். அதற்காக, நாம் இப்புனித நோன்புப் பெருநாள் தினத்தில், திடசங்கற்ப உறுதி எடுத்துக்கொள்ள முயற்சிப்போமாக! அத்துடன், நாம் ஓரணியாக நின்று ஒற்றுமைப்பட்டு, எமக்கு வந்துள்ள சவால்களை எதிர்கொண்டு பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போமாக!
ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment