எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகம்மது முர்ஷியின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என துருக்கி நாட்டின் ஜனாதிபதி தாயிப் எர்த்துக்கான் வலியுறுத்தியுள்ளார்.
எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாயாக தெரிவு செய்யப்பட்டவர் முகம்மது முர்ஷி (67). இவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க கடந்த 2013ஆம் ஆண்டு கடுமையான போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, அந்நாட்டு ராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. ஜனாதிபதி மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்றதாக குற்றம் சுமத்தி முகம்மது முர்ஷிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன.
இதனிடையே வழக்கு விசாரணைக்காக முர்ஷி கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், முகம்மது முர்ஷி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முர்ஷியை எகிப்து அரசு கொன்றுவிட்டதாக துருக்கி ஜனாதிபதி தாயிப் எர்த்துக்கான் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த எர்த்துக்கான், ’எகிப்து முன்னாள் ஜனாதிபதி முகம்மது முர்ஷியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களும் வலியுறுத்த வேண்டும்’ என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment