ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான்களுடன் சமரசத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் தொடர் முயற்சியின் பலனாக ஏழாவது சுற்று சமாதானப் பேச்சு தோஹாவில் தொடங்கியது.
ஆப்கானிஸ்தானின் காபுல் உட்பட பல பகுதிகளில் தலிபான் அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ள நிலையில், தலிபான்களை வேரோடு அழிக்கும் வரை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் என டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச தலிபான் அமைப்பு அழைப்பு விடுத்தது. இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலிபான் இயக்க பிரதிநிதிகள் இடையே நடந்த ஆறுசுற்று பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கொள்கை அறிவிப்பு, ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் படைகள் குவிப்பு, ஆப்கானிஸ்தான் அரசு பிரதிநிதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை மற்றும் நிரந்தரமான போர்நிறுத்தம் ஆகிய 4 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக தலிபான்கள் பிடிவாதமாக இருந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பதவிக்கு வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. அதற்குள் தலிபான்களுடன் சமரச உடன்படிக்கையை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதில் அமெரிக்கா முனைப்புகாட்டி வருகிறது.
இதில் ஒரு கட்டமாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ முன்னறிவிப்பு ஏதுமின்றி கடந்த 25அம் திகதி ஆப்கானிஸ்தானுக்கு திடீர் விஜயம் செய்தார்.
இந்நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவுடன் இன்று ஏழாவதுசுற்று பேச்சுவார்த்தை தொடங்கியதாக தலிபான்களின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் சமரசத்தீர்வு எட்டப்பட்டால் 17 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க படைகள் விரைவில் வாபஸ் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment