முஸ்லிம் இனத்துக்கெதிராக, தமிழர்களோடு கைகோர்த்தவர்களே தமிழர்களின் இந்து ஆலயங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 28, 2019

முஸ்லிம் இனத்துக்கெதிராக, தமிழர்களோடு கைகோர்த்தவர்களே தமிழர்களின் இந்து ஆலயங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களின் சுயலாப அரசியலுக்காக மக்களையும், இளைஞர்களையும் தவறான பாதையில் வழிநடத்தி கொண்டிருக்கின்றனர் என மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், பௌத்த மேலாதிக்கத்தின் அனுசரணையுடன் கல்முனை விடயத்தை கையாள முயற்சிப்பது நமக்கு நாமே மண்ணை வாரிப்போடுவது போன்ற செயற்பாடாகும் என குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துதல் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றது.

இதற்கிடைப்பட்ட காலங்களில் தமிழ் மக்கள் சார்பான பிரதி அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள், அரசாங்கம் சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து போயுள்ளார்கள்.

இவர்களின் ஆட்சிக் காலத்தில் தங்களின் சுயலாப அரசியல் வேலைகளில் ஈடுபட்டுவிட்டு தற்போது பதவியில் இல்லாதபோது விசமத்தனமான விமர்சனங்களை தற்போது முன்வைப்பது அவர்களின் அரசியல் சுயலாப சிந்தனையையே காட்டுகின்றது. 

இவ்வாறான பதவிகளில் இருந்து தற்போது அப்பதவிகளில் இல்லாமல் இருப்பவர்களும் இது தொடர்பாக கருத்து தெரிவிப்பதும், உண்ணாவிரதத்தில் பங்கெடுப்பதும் வேடிக்கையாக உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தங்கள் நிலை மறந்து அவர்களின் பதவியின் அதிகாரம் மறந்து செயற்பட்டு வருகின்றார்கள். மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து அவர்களின் பிரதிநிதியாகவே நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றார்கள். அங்குதான் மக்களின் பிரச்சினைகளைக் கதைத்து தீர்வு காணவேண்டும். அதைவிடுத்து மக்களின் போராட்டங்களை பிரசார மேடையாக பயன்படுத்தி வருகின்றனர்.

மக்களை ஏமாற்றும் அரசியலை கூட்டமைப்பு செய்யவில்லை. மாறாக பதவிக்காகவும், பணத்திற்காகவும் அரசியலுக்கு வந்தவர்களே இவ்வாறு மக்கள் இட்ட ஆணையையும் மீறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

பௌத்த பிக்குகள் சிறுபான்மை இனத்தை கறிவேப்பிலை போன்று நடத்தி வருகின்றார்கள். இன்று ஒரு சிறுபான்மை முஸ்லிம் இனத்துக்கெதிராக, தமிழர்களோடு கைகோர்த்தவர்களே தமிழர்களின் இந்து ஆலயங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இந்த விடயங்களில் கூட்டமைப்பு நுட்பமான முறையில் செயற்படுகின்றது.

நாளை இதே கல்முனை தமிழ் பிரதேசத்தில் பௌத்த விகாரை கட்டப்போகின்றார்கள் என்றால் அதற்கெதிராக யார் போராட்டம் செய்வது? அங்கே இப்போது கருத்து தெரிவிக்கும் அமைச்சர்களோ? நாடாளுமன்ற உறுப்பினர்களோ வரமாட்டார்கள். ஏனெனில் அவர்களின் சிந்தனையெல்லாம் மக்கள் நலன் இல்லை.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. அதனை பெற்றே தீர வேண்டும். அதற்காக பௌத்த மேலாதிக்கத்தின் அனுசரனையுடன் பெற முயற்சிப்பதுதான் நாமே நமக்கு மண்ணை வாரிப்போடுவது போன்ற செயற்பாடாகும். சிறுபான்மை இனமான நாம் பெற வேண்டியவை நிறையவே உள்ளது.

அதற்கும் இதே பௌத்த பிக்குமார் இடையூறாகவே இருப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. எமக்கு கடந்த காலங்கள் பல வரலாறுகளை கற்றுத்தந்துள்ளது. ஆகவே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தான் என்பதில் எந்தவிதமான மாற்று கருத்துமில்லை.

கல்முனையில் கூட்டமைப்புக்கு எதிர்ப்பு என்று ஊடகங்களிலே பரவலாக பேசப்பட்டது. உண்மையில் அன்றைய தினம் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் தயா கமகே, அத்துரலிய ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோரும் சென்றிருந்த போது சுமந்திரனுக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏனையோருக்கு எதுவிதமான செயற்பாடுகளும் நடைபெறவில்லை.

மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே இதுவாகும். அந்த நம்பிக்கையை மிக விரைவாக நிறைவேற்றுவார்கள். அதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் செயற்படுத்தி வருகின்றனர்” என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment