கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் குழு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சென்று, பயங்கரவாத அமைப்புகளுடன் வீணாக தொடர்பு படுத்தப்பட்டு கைதாகி சிறையில் இருக்கும் பலரது கோப்புகளை கொடுத்துவிட்டு வந்ததன் பின்னர் கட்சியின் சட்டத்தரணிகள் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் தொடர்பில் இருந்ததன் பயனாக முதற்கட்டமாக சிலர் விடுதலை செய்யப்பட்டு அல்லது பிணையில் வரமுடிந்திருக்கிறது. (வாரியப்பொல, அளுத்கம போன்ற பிரதேசங்களில்)
அல்ஹம்துலில்லாஹ் !
நேற்று (31st May) இரண்டாம் கட்ட சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் ருவன் விஜேவர்தன தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இம்முறை அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தலைவர ரவூப் ஹக்கீம் வெளிநாட்டில் என்பதால் எமது செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் (அ.இ.ம.கா) என கட்சி பேதங்களுக்கு அப்பால் பலரும் பங்கேற்றனர். இவ்வாறான ஒன்றிணைந்த முயற்சிக்கு வழி அமைத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.
நேற்று இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், புலன் விசாரணை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டதனால் பிணை அல்லது விடுதலைக்கான வழிமுறைகளை விரைவு படுத்தக்கூடிய பொறிமுறை ஒன்றிற்கான பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் காணப்பட்டது.
எமது முயற்சியால் ஆவணப்படுத்தப்பட்ட அட்டவணையுடன் சென்றிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்கள் கைதாகி உள்ளவர்களின் கைதுகளுக்கான தெளிவான விளக்கத்துடன் இருந்ததனால் உயரதிகாரிகளுக்கு உரிய முறையிலான விளக்கத்தை வழங்க முடிந்தது.
இன்ஷாஅல்லாஹ் திங்கட்கிழமை பொலிஸ்மா அதிபர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடனான சந்திப்பொன்று உள்ளது. அதன் போது திகதி வாரியாக அடுத்தடுத்து வரவுள்ள வழக்குகளின் அட்டவணை ஒன்றை சமர்பிப்பதற்கான வேலைகள் சனி ஞாயிறு (இன்றும் நாளையும்) தினங்களில் தாருஸ்ஸலாமில் நடைபெறுகிறது.
கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் கடந்த பல வாரங்களாக அநியாயமாக உட்கார வைக்கப்பட்டிருக்கும் பத்து நபர்கள் அடங்கிய குடும்பம் சம்பந்தமாக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் உருக்கமான வேண்டுகோள் முன்வைத்தார்.
இன்றே அவர்களின் விடுதலைக்கான அறிவுறுத்தலுடன் நீதி மன்றத்தில் அவர்களை முன்னிலை படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி வழங்கப்பட்டது. இது எமது குழுவிற்கு மிகுந்த மன நிறைவு அளிக்கிறது.
இந்த குடும்பத்தினரின் விடுதலையை விரைவு படுத்துவதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் ஹஸீருடன் இணைந்து சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், ஷிபான் ஆகியோர் அங்கு சென்றிருந்தமை குறிப்படத்தக்கது.
இன்ஷாஅல்லாஹ் நாளை அனேகமாக அவர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியுமாயிருக்கும். துஆ செய்து கொள்ளுங்கள்.
கட்சி பேதங்களுக்கு அப்பால் இணைந்து செல்கிற பயணமாக இதனை வழிநடத்துகிற அல்லாஹ்விற்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment