உலகக் கிண்ண கிரிக்கெட் : இலங்கை - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

உலகக் கிண்ண கிரிக்கெட் : இலங்கை - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

12வது உலகக் கிண்ணத் தொடரின் 3வது போட்டி இன்று கார்டிப் மைதானத்தில் இலங்கை - நியுசிலாந்து அணிகளுக்கிடையில் மாலை 3 மணிக்கு நடைபெறுகின்றது.

கடந்த வருடங்களில் பின்னடைவை சந்தித்து வந்த இலங்கை அணி புதிய தலைவர் திமுத் கருணாரத்னவின் தலைமையில் இவ்வுலகக் கிண்ணத் தொடரில் மோதவுள்ளது. இலங்கை அணி ஏற்கனவே நடைபெற்ற இரு பயிற்சிப் போட்டிகளிலும் தோல்வியுற்ற நிலையில் இன்றைய தனது உலகக் கிண்ண முதலாவது போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கின்றது. இலங்கை அணியின் துடுப்பாட்ட சரிவே பயிற்சிப் போட்டிகளின் தோல்விக்கு காரணமாகும்.

தலைவர் திமுத் கருணாரத்ன ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இரு போட்டிகளிலும் சுமாரான ஆரம்பத்தைக் கொடுத்திருந்தார். முதல் பயிற்சி போட்டியில் காயத்துக்குள்ளான அவிஷ்க பெர்னாண்டோ அதிலிருந்து மீண்டுள்ளதால் இன்றைய போட்டியில் திமுத்துடன் ஆரம்ப வீரராக களமிறங்குவார் என நம்பப்படுகிறது. 

மத்திய வரிசையில் வரும் குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அஞ்சலோ மெத்தியூஸ், திஸர பெரேரா போன்ற துடுப்பாட்ட வீரர்களில் இருவர் களத்தில் நின்று ஓட்டங்களைக் குவித்தாலே இன்றைய போட்டியில் வெற்றி பெறக் கூடிய ஒரு இலக்கை எதிரணிக்கு நிர்ணயிக்கலாம்.

முக்கியமாக திஸர பெரேரா கடைசியாக நியூசிலாந்தில் நடைபெற்ற தொடரின் போது இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்திருந்தார். எனவே இப்போட்டியில் அவரின் அதிரடி தொடர்ந்தால் சிறந்த ஒரு போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப், சுரங்க லக்மால் பயிற்சிப் போட்டிகளில் சற்று சிறப்பாக பந்து வீசியிருந்தனர். எனவே இவர்களுடன் அதிரடி சகலதுறை வீரர் இசுரு உதானவும், இலங்கை அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவும் இணைந்து இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணிக்கு நெருக்குதலை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். 

இங்கிலாந்து ஆடுகளங்களில் முதல் 10-15 ஓவர்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானவையாக உள்ளதால் முதல் ஓவர்களில் இவர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான வெண்டர்சேயும், ஜீவன் மெண்டிசும் எதிர்பார்த்தபடி பயிற்சிப்போட்டிகளில் பிரகாசிக்கவில்லை. பகுதி நேர சுழற் பந்து வீச்சாளர்களான மிலிந்த சிறிவர்தன, தனஞ்சய டி சில்வாவும் சுழற்பந்து வீச்சில் கைகொடுத்தால் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் இதுவரை ஆறு முறை அரையிறுதிக்கும் 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து இறுதிப் போட்டி வரை முன்னேறியது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அவ்வணி அண்மையில் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது.

நியூசிலாந்து அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களான டெய்லர், வில்லியம்சன் மற்றும் குப்தில் போன்ற வீரர்ககள் இருப்பதால் எந்தவொரு கடுமையான சூழ்நிலையிலும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என நம்பலாம். 

அதுமட்டுமன்றி, பந்து வீச்சில் பௌல்ட் மற்றும் சௌதீ ஆகியோரின் வேகம் எந்த அணியையும் சாய்க்கும் திறமை பெற்றவர்கள். மேலும் கொலின் முன்றோ, சன்டனர் மற்றும் கிராண்ட்ஹோம் போன்ற வீரர்கள் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கலாம்.

அனைத்துத் திறமையையும் கொண்ட நியூசிலாந்து அணி களத்தடுப்பிலும் சிறந்ததாகவுள்ளதால் அண்மைய காலங்களில் மற்றைய அணிகளுக்கு சவாலாகவே விளையாடி வருகின்றது. இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற இரு பயிற்சிப் போட்டிகளிலும் இந்தியாவை இலகுவாக வென்ற அவ்வணி மேற்கிந்திய தீவுகளின் அதிரடியில் சிக்கி படுதோல்வியடைந்தமை அவ்வணிக்கு இன்றைய போட்டியில் சற்று மன அழுத்தத்தையே கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு அணிகளுக்கிடையிலான கடைசியாக நியுசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை அணி படுதோல்வியடைந்திருந்தது. அப்போட்டியில் நியூசிலாந்தின் சகலதுறை வீரரான ஜேம்ஸ் நீஷம் இறுதி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ஆடி இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்திருந்தார். 

இவர் மட்டுமல்ல நியூசிலாந்து அணியில் கிரஹம்ஹோம், மிச்செல் சான்டனர் போன்ற வீரர்களும் கடைசி நேரத்தில் வேகமாக தடுப்பெடுத்தாடக் கூடியவர்கள் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment