எக்காரணம் கொண்டும் ரிஷாத் இராஜினாமா செய்யமாட்டார் - பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

எக்காரணம் கொண்டும் ரிஷாத் இராஜினாமா செய்யமாட்டார் - பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

அமைச்சர் றிசாத் பதியுதீன் எவ்வித காரணங்களுக்காகவும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய மாட்டரென பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உறுதிப்பட தெரிவித்தார்.

திருகோணமலை உவர் மலை விவேகானந்தா கல்லூரியில் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அங்கு அவர் உரையாற்றுகையில், அமைச்சர் மீதான வீண் பழி சுமத்துவதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும் அவர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியே காரணம். 

22 இலட்சம் முஸ்லிம்களும் இந்த நாட்டில் பயங்கரவாதிகளோ ஐ.எஸ் ஐ.எஸ் இயக்கமோ இல்லை. இதனால் நாட்டை சீர்குலைக்க முற்படுவதும் எமக்கு மன வேதனையளிக்கிறது.

இன ஐக்கியம் என்பது செயல்பாட்டில் காட்ட வேண்டும். கட்சி பேதமற்ற முறையில் இன, நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் அதுவே நாட்டிலுள்ள சகல இனங்களும் ஒற்றுமைக்கான வழியாகும்.

சில ஊடகங்கள் காலை வேளையிலேயே இனவாதத்தை கக்குகின்றன. ஒரு முறை வாசிக்க வேண்டிய செய்தியை ஏழு முறை வாசித்துக் காட்டுகிறது.

இங்கு காணப்படும் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இன, மத பேதமற்ற முறையில் எனது நிதிகளை ஒதுக்கி வருகிறேன். சிலர் முஸ்லிம் தலைமைகளை குறிப்பாக அமைச்சர் ரிசாத் போன்றவர்களை பிழையாக சித்தரித்து சகோதர மொழி பேசுகின்ற மக்களை போலிப் பிரசாரங்கள் ஊடாக நம்ப வைக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டம் மூவின மக்களையும் உள்ளடக்கியுள்ளது இன ஐக்கியம் இங்கிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். வங்குரோத்து அரசியல் நடத்தி முஸ்லிம்களின் மனதை புண்படுத்த நினைப்பதும் இன ஐக்கியத்தை சீர்குலைக்கிறது.

ஒவ்வொரு மதமும் மார்க்கமும் நல்ல விடயங்களையே போதிக்கின்றன. அதனை சிலர் தவற விட்டு ஒற்றுமையை சீர்குலைக்கின்றனர். இவ்வாறான இன வாத, மதவாத சிந்தனைகளை தகர்த்தெறிந்து ஒற்றுமைக்கான பயணத்தில் எம்மையும் ஈடுபடுத்திக் கொள்வோம் என்றார்.

திருமலை நிருபர்

No comments:

Post a Comment