கடந்த சில வருடங்களாக நாட்டினுடைய பொதுமக்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதற்காக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அபிவிருத்தியின் உண்மையான பெறுபேறுகள் இன்று நாட்டின் விவசாய சமூகத்திற்கு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பொலன்னறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் இன்று (01) இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மெதிரிகிரிய, லங்காபுர உள்ளிட்ட சுற்றுப் பிரதேசங்களை கழிவுகளற்ற நகரமாக மாற்றும் நோக்குடன் சுங்காவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொறிமுறைச் சேதனப் பசளை தயாரிப்பு மத்திய நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
ஜெயிக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 50 தொன் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய முடியும் என்பதுடன், அதன் மூலம் சுமார் 20 தொன் சேதனப் பசளையை தயாரிக்கவும் முடியும். இதற்காக 230 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து சேதனப் பசளை மத்திய நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கழிவு மீள்சுழற்சி செய்யப்படுவதையும் பார்வையிட்டார்.
சோமாவதி ரஜமஹா விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேரர், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் ஜெயிக்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளும், வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, பொலன்னறுவை நகர பிதா சானக சிதத் ரணசிங்க, தலைமைச் செயலாளர் எச்.எம்.பி.பண்டார, மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேநேரம் 58 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிசோபுர புதிய மகாவலி சுற்றுலா இல்லத்தையும் ஜனாதிபதி இன்று திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து மகாவலி விவசாய குடியேற்றங்களில் விவசாய சமூகம் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமும் ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தின் மற்றுமொரு பெறுபேறாக மெதிரிகிரிய புதிய அபிவிருத்தி வலயத்தின் விவசாய சமூகத்தின் சமூக தொழில்முயற்சி அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்குடன் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சினால் காலநிலை மாற்றத்திற்கு இயைபாக்கச் செய்யும் திட்டத்தின் பங்களிப்பில் உலக உணவு நிகழ்ச்சித்திட்டமும் ஐநா அபிவிருத்தித் திட்டமும் இணைந்து செயற்படுத்தியுள்ள மகாவலி அத்சலு பியச, மகாவலி எபரல், மகாவலி மின் விசிதுரு மெதுர மகாவலி மலர்கள் மற்றும் கன்றுகள் நாற்றுப்பண்ணை ஆகியவற்றையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் மகாவலி காணி உரிமையாளர்களுக்கு பத்து இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மெதிரிகிரிய குடியேற்றத்திற்கான 1,222 காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு, விவசாயிகளுக்கான உபகரணங்கள் வழங்குதல் ஆகிய பல்வேறு நிகழ்வுகள் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றன.
‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மெதிரிகிரிய, லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவில் 13 பேர்களுக்கு வீடுகளும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விவசாயிகளை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவது நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய அம்சமாகும் என்று குறிப்பிட்டார். நாட்டிலுள்ள விவசாயிகள் முகம்கொடுத்துள்ள நீர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து விவசாய சமூகத்திற்காக பல்வேறு முக்கிய பணிகளை கடந்த காலத்தில் தாம் செய்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளார் நாயகம் டீ.எம்.எஸ் திஸாநாயக்க, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்த்தன, நகர பிதா சானக சிதத் ரணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment