உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது கண்டனத்துக்குரியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனை செய்தவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்பதும் வெளிப்படையானது. அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் ஓரம் கட்டும் இனவாத சிந்தனை கொண்ட அரசியல் முன்னெடுப்புகளை அனுமதிக்க முடியாது. தனித்துவமான சமூகம் என்ற வகையில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் எடுத்திருக்கும் நிலைப்பாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இலங்கையில் சிறுபான்மை சமூகம் என்ற வகையில் மலையகத் தமிழ் சமூகம் முஸ்லிம் சமூகத்துடன் கைகோர்க்க வேண்டிய தருணம் இது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் தொடர்ச்சியாக நாட்டில் எழுந்துள்ள நெருக்கடியான அரசியல் சூழ்நிலை காரணமாக தமது அமைச்சுப்பதவிகளையும் அரசாங்கத்தில் கொண்டிருந்த ஏனைய பதவிகளையும் துறப்பதற்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டது எனினும் அதில் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பது வெளியில் பேசப்படாத உண்மை. எனினும், மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அந்த தாக்குதலை இன அடிப்படையில் சிந்தித்து எதிர்வினையாற்றாமல் தமிழ் சமூகம் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட்டது.
கிறிஸ்த்தவ மக்களும் அதனையே செய்தனர். முஸ்லிம் மக்கள் அவர்களுக்குள்ளேயிருந்து எழுந்த அடிப்படைவாத கும்பலை அழித்தொழிப்பதற்கும், கைது செய்வதற்கும் துணை நின்றனர், எனினும், இந்த தாக்குதலில் நேரடியாக பாதிப்புறாமல் தமது அரசியல் இருப்புக்காகவும் பதவி ஆசைகளுக்காகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை திசைதிருப்பி நாட்டில் இன, மத நல்லிணக்கததை பாரியளவில் சீர் குலைக்கும் நடவடிக்கையில் திட்டமிடப்பட்ட குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாத கும்பலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருந்து அவை நிரூபிக்கப்படுமானால் அதற்கு உரிய தண்டனை வழங்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அத்தகைய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் முன்பதாக முழு முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முயற்சிக்கும் இனவாத போக்கை அனுமதிக்க முடியாது.
சிறுபான்மை சமூகம் என்றவகையில் இதுபோன்ற இனவாத தாக்குதல்களை இதற்கு முன்னர் அனுபவித்த சமூகம் என்ற வகையில் மலையகத் தமிழ் சமூகம் இன்றைய நிலையில் முஸ்லிம் சமூகத்துடன் கைகோர்க்க வேண்டிய தருணமாக இன்றைய அரசியல் சூழ்நிலை காணப்படுகின்றது. ஒரே மொழி பேசும் சிறுபான்மை சமூகமாக இந்த தருணத்தில் தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியுள்ளது.
கடந்தகாலங்களில் சில கசப்பான சிறு சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும் கூட அவற்றை மறந்து இரண்டு சமூகங்களும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக செயற்படுதல் வேண்டும். இன்று முஸ்லிம் சமூகத்தின் மீது ஏவிவிடப்படும் இந்த இனவாத போக்கு நாளை எமக்கும் ஏற்படலாம் என்பதனை மனதில் கொண்டு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து சகோதர முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment