அலுவலகங்களில் முஸ்லிம்கள் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படும் - இம்ரான் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

அலுவலகங்களில் முஸ்லிம்கள் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படும் - இம்ரான் எம்.பி

அலுவலகங்களில் முஸ்லிம்கள் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச ஊழியர்களின் ஆடை தொடர்பாக பொதுநிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபத்தின் படி முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களில் அபாயா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் பலர் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இந்த சுற்றுநிருபத்தின்படி முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமை மீறப்படுவது தொடர்பாக நான் உடனடியாக பிரதமரை தொடர்புகொண்டு தெளிவுபடுத்தினேன். இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே சில முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் உரையாடியதாகவும் அலுவலகங்களில் முஸ்லிம்கள் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட தான் நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது பிரதமர் தெரிவித்தார்.

மேலும் முஸ்லிம் விவகார அமைச்சு இந்த சுற்றுநிருபம் சம்மந்தமான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ஹலீமும் என்னிடம் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து அரசியல் ,பொருளாதாரம்,கலாச்சாரம் என சகல துறைகளிலும் முஸ்லிம்களை குறிவைத்து இனவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன் பின்னால் நன்கு திட்டமிடப்பட்ட பாரிய அரசியல் நிகழ்ச்சி நிரலொன்று உள்ளது.

இந்த நடவடிக்கைகளை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை தெரிவிப்பதாலும் அதற்கு எதிர்நடவடிக்கைகளை முன்னெடுப்பதாலும் இப்போதுள்ள சூழ்நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. அவ்வாறு செய்வதையே இனவாதிகள் எதிர்பார்த்துள்ளனர். எனவே இந்த சூழ்நிலையில் பொறுமையுடன் செயற்படுமாறு எமது சகோதரர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இனவாத சூழ்ச்சியை தோற்கடித்து அசாதாரண நிலையை போக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் சிவில் அமைப்புக்கள் மற்றும் உலமாக்களுடன் சேர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். ஆகவே இந்த நடவடிக்கைகளுக்கு உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம்.

ஊடகப்பிரிவு

No comments:

Post a Comment