அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் முன்னெடுத்துவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது.
அதற்கமைய மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2ஆவது நாளாக தான் மீண்டும் இணைந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் நம்பிக்கையில்லா பிரேரணையையும் முன்னைவத்திருந்தார்.
அடுத்த கட்டமாக நேற்று முன்தினம் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக அதுரலிய தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
இதனையடுத்து அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் நேற்று காலை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment