முஸ்லிம் தலைவர்கள் அரசோடு சேர்ந்து அமைச்சுப் பதவிகளை எடுத்து தனி அடையாளத்துடன் வெளியேறியதன் காரணமாக தமிழர்கள் மட்டும் இந்த நாட்டின் பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக செயற்படும் நிலைமை ஏற்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, May 31, 2019

முஸ்லிம் தலைவர்கள் அரசோடு சேர்ந்து அமைச்சுப் பதவிகளை எடுத்து தனி அடையாளத்துடன் வெளியேறியதன் காரணமாக தமிழர்கள் மட்டும் இந்த நாட்டின் பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக செயற்படும் நிலைமை ஏற்பட்டது

எஸ்.எம்.எம்.முர்ஷித்
இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் தங்களது மதம் சார்ந்து தற்காப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பாகவே ஏற்படுத்திய போது தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினை ஈடுபடுத்திக் கொண்டார்கள் என முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் வாழைச்சேனை மயிலங்கரச்சை வாழ் மக்களும் இணைந்து தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளுக்கு 41ம் நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வாழைச்சேனை மயிலங்கரச்சை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நாட்டில் சிங்கள பௌத்த ஆதிக்கம் ஒன்று இருக்க வேண்டும். இங்கிருக்கின்ற சிறுபான்மை மக்கள் எல்லாம் பெரிய மரத்திலே படருகின்ற கொடியாக இருக்க வேண்டும் என்ற அரசியல் சித்தாந்தமும். அவர்களின் மத சித்தாந்தமும் பல்வேறு நெருக்குதல்களை இங்கு உருவாக்கியது. இவை எமது தமிழ் இனத்தை நோக்கியதாகவே இருந்தது.

எமது மொழி, இடம், கல்வி பறிக்கப்பட்டது. இதன்போது இந்தப் பேரினவாத நெருக்கடிக்குள் இருந்து மீட்சி பெறுவதற்காக தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து எடுத்த நடவடிக்கைகள் எழுபதுக்குப் பின்னர் முஸ்லிம் தலைவர்கள் அரசோடு சேர்ந்து அமைச்சுப் பதவிகளை எடுத்து அவர்களை தனி அடையாளத்துடன் வெளியேறியதன் காரணமாக தமிழர்கள் மட்டும் இந்த நாட்டின் பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக செயற்படும் நிலைமை ஏற்பட்டது.

அது சாத்வீகப் போராட்டமாகவும், ஆயுதப் போராட்டமாகவும் பரிணமித்த வேளையில் இஸ்லாமியர்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளத்தில் இருந்து தங்களை வேறுபடுத்தி இஸ்லாமியர்கள் என்ற வரையறைக்குள்ளேயே நின்றார்கள்.

கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் சிங்கள அடிப்படைவாத அமைப்புகள் தெற்கிலே இஸ்லாமிய மக்கள் மீதும் அவர்களின் வணக்கத்தலங்கள் மீதும் பல அடாவடித் தனங்களை மேற்கொண்டார்கள். இவர்களுக்கு உரம் சேர்ப்பது போலத்தான் அன்றைய அரசின் நடவடிக்கையும் இருந்தது. 

இந்த விடயங்கள் இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் அவர்களின் மதம் சார்ந்து தற்காப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பாகவே ஏற்படுத்தியது. அவ்வாறு இருக்கின்ற போது தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் வாசனை கிடைத்தது. அது ருசித்தது பிறகு அவர்கள் அதிலே ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்றார்.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க. கமலநேசன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா. நடராசா, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களாக எஸ். நல்லரெட்ணம், எஸ். பகிரதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னனி தலைவர் எஸ். தீபாகரன், மயிலங்கரச்சை விகாராதிபதி ஸ்ரீமகிந்த லங்கார, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment