சிலாபத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை தொடர்ந்து இன்று (13) பகல் சிலாபம் நகரம் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட பதிவு மற்றும் பின்னூட்டம் தொடர்பில் சிலாபம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் சிலவற்றில் நேற்றைய தினம் (12) அமைதியற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இருதரப்பினருக்கும் இடையில் எழுந்த பிழையான புரிதல் காரணமாக குறித்த பகுதியில் உள்ள கடைசில தாக்கப்பட்டதோடு அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, பொலிஸ் மற்றும் முப்படையினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, அங்கு நேற்று நண்பகல் அளவில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு இன்று (13) அதிகாலை 4.00 மணியளவில் மீண்டும் தளர்த்தப்பட்டது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து, மக்களின் அன்றாட வாழ்க்கை படிப்படியாக வழமையான நிலைக்கு திரும்புவதை அவதானிக்க முடிவதோடு பெருமளவிலான அரசாங்க மற்றும் தனியார் பிரிவு அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதோடு, சிலாபம் பிரதான மீன் விற்பனை நிலையம் மற்றும் மரக்கறி விற்பனை நிலையம் ஆகியவற்றில் மக்களை காணக்கூடியதாக இருந்தது.
நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான சொத்துகள் தொடர்பில் இன்று முற்பகல் அளவில் பொலிஸாரினால் விசாரணைகள் இடம்பெற்றன.
மக்களின் அன்றாட வாழ்க்கை வழமைக்குத் திரும்பியபோதும் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதோடு சிலாபம் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளில் மாணவர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலாபத்தில் உள்ள தனியார் வகுப்புக்களில் மாணவர்களின் வருகை எண்பது வீதமாக காணப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதேவேளை நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவர் உள்ளிட்ட மூவரும் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரசாத் பூர்ணமால்
No comments:
Post a Comment