உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் ஷாந்த கஹவல தெரிவித்துள்ளார்.
குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் மற்றும் குடும்ப உறுப்பினரின் இழப்பினால் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நிலை உள்ளிட்ட தரவுகள் திரட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்டு குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
தாக்குதல்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளில் தரவுகளை சேகரிக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டோரின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக, சபையின் தலைவர் ரஞ்சித் ஷாந்த கஹவல குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர மற்றுமொரு குழுவினர், இன்றும் நாளையும் மட்டக்களப்பில் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் தரவுகளை சேகரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த தரவுகளைக் கொண்ட அறிக்கையை எதிர்வரும் 7 ஆம் திகதி வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment