சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை பெருநாளைக்கு முன் விடுதலை செய்ய அரசியல் மற்றும் சட்ட உதவி பெற்றுக் கொடுக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயங்கக் கூடாது!
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் அனைவரையும் மாவட்ட நீதிமன்றங்களால் பிணை வழங்க முடியாத ICCPR சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருக்கின்றமையால் அப்பாவிகள் தொடர்ந்தும் சிறையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது!
அவ்வாறான கடுமையான உத்தரவை பொலிசாருக்கு பிறப்பித்த பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அவர்களிடம் ஏற்கனவே முஸ்லிம் அரசியல் தலைமைகள் முறையிட்ட பொழுதும் குறைந்தபட்சம் மேல்நீதிமன்றங்களில் அவர்களது வழக்குகளை துரித கதியில் கையாளவும் தேவைப்படுமிடத்து சட்ட உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயங்கக்கூடாது.
குளியாபிடிய மினுவங்கொட பிரதேசங்களில் முஸ்லிம் கிராமங்களை தாக்கிய காடையர்களை கைது செய்து தற்பொழுது பிணை வழங்கப்பட்டு வருகிறது, அவர்களுக்காக அவர்களுடைய அரசியல் தலைமைகள் களத்தில் இருக்கிறார்கள்.
இன்றைய அரசை பதவிக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாமல் சதி கவிழ்ப்பில் இருந்தும் காப்பாற்றிய பெருமையுடன் அவசர கால சட்ட அமுலிற்கும் ஆதரவளிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் நேருக்கு வாரனக்களுக்கு உள்ளாகும் பொழுது இவ்வாறு கையாலாகாத நிலையில் இருத்தல் கவலை அளிக்கிறது.
ஏற்கனவே ஓரிரு அதிகரித்த சந்தேகத்திற்கு இடமானவர்களின் கைது குறித்து தலையிட்ட அல்லது விசாரித்த முஸ்லிம் அமைச்சர்கள் மீது ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சீறிப்பாய்கிறார்கள் என்பதற்காக சிறையில் வாடும் நிராபராதிகளுக்காக குரல் கொடுக்கவும் கை கொடுக்கவும் தயங்கும் நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருப்பதாகவே கருத முடிகிறது!
முஸ்லிம் மக்களை வரலாற்றில் நெருக்கடியான இந்த கால கட்டத்தில் நிர்க்கதி நிலையில் விட்டு அரசியல் அனாதைகளாக நட்டாற்றில் விட்டு விட்டு எதற்காக நாம் அரசியல் செய்ய வேண்டும் அளுத்கமை முதல் காலி அம்பாறை திகனை குளியாபிடிய மினுவங்கொட வரை இந்த சமூகத்தின் மீது காடைத் தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இன்று வரை உரிய இழப்பீடுகளும் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப் படவில்லை.
அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களின் புள்ளிவிபரங்கள் கூட கிராம சேவை உத்தியோகத்தர்களால் பெறப்படவில்லை, பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் முறையீடு செய்வதற்கான எத்தகைய ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப் படவுமில்லை.
தற்பொழுது அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் நாடகங்களுக்குப் பின்னால் இருக்கும் சர்வதேச பிராந்திய ஆதிக்க சக்திகளும் அவர்களது உள்நாட்டு முகவர்களும் முஸ்லிம்களைப் பலிக்கடாவாக்கி அரசியல் வியூகங்களை வகுத்து செயற்படுவதனை உணர்ந்தும் முஸ்லிம் தலைமைகள் மௌனிகளாக இருக்கின்றமை வேதனை தருகிறது.
நடைபெறுவது ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் அரசியலாக இருந்தால் கூலிப்படைகளின் அட்டகாசங்களுக்கு முஸ்லிம் சமூகத்தை இரையாக்காது ஆளும் தரப்பில் இருந்து விலகி நீங்கள் அனைவரும் எதிர்த் தரப்பில் இருந்து கொள்ளுங்கள் அல்லது பாராளுமன்றம் களைந்து தேர்தல் இடம் பெறுவதற்கான நிலையை ஏற்படுத்துங்கள்!
உண்மையில் அரசியல் எதிரிகளின் உள்நோக்கம் அதுவாக இருந்தாலும் அரசை நீங்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கும் அரசினால் உங்கள் சமூகத்தை காப்பாற்ற முடியாவிட்டால் இந்த சரணாகதி அரசியலில் என்ன இலாபம் இருக்கிறது!
நீங்கள் துணிந்து ஓரணியாக நிற்க வேண்டும் அல்லது அரசியலில் இருந்தே ஒதுங்கி புதிய இளம் தலைவர்களுக்கு வழிவிட வேண்டும்! தொடர்ந்தும் இந்த அரசியல் சதிராட்டத்தில் முஸ்லிம்கள் பலிக்கடாவாவதை அனுமதிக்க முடியாது. யுத்தத்திற்கு இல்லாத வாள் பலாக்காய் வெட்டுவதற்காகவா!
இனாமுல்லாஹ் மஸிகுதீன்
No comments:
Post a Comment