உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு வழங்கவுள்ள பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஒருமுறை பரிசீலிக்குமாறு இலங்கை கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (23) முதல் ஆரம்பமாகவிருந்த இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான 3 நாட்கள் கொண்ட அதிரப்படை முகாமின் அணி இணைப்பு விசேட பயிற்சிகள் மற்றும் தம்புள்ளையில் நடைபெற இருந்த 5 நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சிகள் என்பன பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு இலங்கை கிரிக்கெட்டால் இரத்து செய்யப்பட்டது.
குறித்த தீவிரவாத தாக்குதலுடன் இலங்கை கிரிக்கெட் அணி தீவிரவாதிகளின் பிரதான இலக்காக உள்ளதாகவும், இங்கிலாந்தில் வைத்து அந்த தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை கருத்திற்கொண்டு இம்முறை உலகக் கிண்ணத்தில் கூடுதல் பாதுகாப்பை இலங்கை அணிக்கு வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் ஐ.சி.சியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு ஐ.சி.சியிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா கருத்து தெரிவிக்கையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் ஒவ்வொரு அணிக்கும் விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு ஐ.சி.சியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை கருத்திற்கொண்டு இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு ஐ.சி.சியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே அதற்கான உறுதிப்படுத்தலை ஐ.சி.சியினால் மிகவிரைவில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படுகின்ற விமானப்படை அதிகாரி கனிஷ்க குலரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போது, இம்முறை உலகக் கிண்ணத்தில் ஒவ்வொரு அணிகளுக்கும் ஐ.சி.சியினால் வழங்கப்படவுள்ள பாதுகாப்பு தொடர்பிலான 90 பக்கங்களைக் கொண்ட விசேட அறிக்கையை நான் ஆராய்ந்து பார்த்தேன். அதில் 3 முக்கிய விடயங்கள் தொடர்பில் ஐ.சி.சியிடம் இருந்து விளக்கத்தையும் பெற்றுக் கொண்டேன்.
எனவே உலகக் கிண்ணத்திலும் இதுபோன்ற தாக்குதல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நாம் ஐ.சி.சியிடம் தெரிவித்திருந்தோம். அதற்கு லண்டன் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டார்.
2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சியொன்று பாதுகாப்பு தரப்பினரால் முறியடிக்கப்பட்டது. அதேபோல, கத்திக் குத்து சம்பவங்களும், திட்டமிடப்பட்ட வாகன விபத்துக்களும் லண்டனின் ஒருசில இடங்களில் இடம்பெற்றன. எனவே இதுபோன்ற சம்பவங்களை எம்மால் மிக எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது.
ஸ்கைப் சமூகவலைத்தளம் ஊடாக இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது லண்டனில் வசிக்கின்ற டயஸ்போரா குறித்தும் தெளிவுபடுத்தியிருந்தேன். ஏனெனில் இலங்கை வீரர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இவர்கள் பல சதி திட்டங்களை மேற்கொள்ளலாம். இதற்கு முன் இவ்வாறான பல சம்பவங்கள் அரங்கேறியிருந்தன. எனினும், லண்டனில் உள்ள பாதுகாப்பு தரப்பினர் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 10 மாதங்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு முகாமையாளராக கனிஷ்க குலரத்ன செயற்பட்டிருந்தாலும், இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் முகாமையாளராக தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் செயற்படவுள்ளதுடன், இலங்கை அணியின் சேவைப் பிரிவு முகாமையாளராக சந்திம மாபட்டுனவும் செயற்படவுள்ளார்.
உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, எதிர்வரும் 07ஆம் திகதி இங்கிலாந்து நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment