உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புபட்ட தற்கொலை குண்டுதாரிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஆகியோரின் சகல சொத்துக்களையும் முடக்குவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படுத்தப்படும் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் பணச்சலவை சட்டம் என்பவற்றின் கீழ் இவர்களின் சொத்துக்களை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 250 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட 9 தற்கொலை குண்டுதாரிகளுக்கு நெருக்கமானவர்கள் பலரும் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணைகள் மூலம் பெருமளவு சொத்துக்கள் இருப்பது அடையாளங்காணப்பட்டுள்ளது.
கொச்சிக்கடை ஆலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரர், கடுவாபிடிய ஆலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரர், கிங்ஸ்பரி ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியின் மனைவி, செங்கரில்லா ஹோட்டல் தாக்குதல்தாரிகள் இருவரில் ஒருவரின் சாரதி, மற்றும் மற்றைய குண்டுதாரியின் சகோதரர்கள் இருவர், மட்டக்களப்பு தற்கொலை சூத்திரதாரிக்கு நெருக்கமானர், சங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியின் செம்பு கைத்தொழிற்சாலைக்கு பொறுப்பான சகோதரர் மற்றும் மனைவி, தெஹிவளை தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவரின் மனைவி மற்றும் சகோதரர்கள் இருவர் அடங்கலான உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் பலர் இப்பாரிய தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக விசாரணைகள் மூலம் புலனாகியுள்ளது.
அத்துடன் இவர்களின் பெருமளவு சொத்துக்களும் அடையாளங்காணப்பட்டுள்ளதோடு அவற்றை தடை செய்ய தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்கொலை குண்டுதாரிகளின் ஏனைய உறவினர்களை அடையாளம் காண்பதற்காக டீ.என்.ஏ பரிசோதனை நடத்துவதற்கு சி.ஜ.டி.யினால் இரு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அடையாளம் காணப்பட்டுள்ள தற்கொலைக் குண்டு தாரிகள்
1. கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலய தற்கொலை குண்டுதாரி மட்டக்குளியைச் சேர்ந்த அலாவுதீன் அஹமட் முவாத்.
2. கடுவாபிடிய தேவாலய தற்கொலை குண்டுதாரி வாழைச்சேனையைச் சேர்ந்த அச்சு முஹம்மது மொஹமட் ஹஸ்துன்
3. கிங்ஸ்பரி ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி கொழும்பு 12 ஜச் சேர்ந்த மொஹமட் அசாம் மொஹமட் முபாரக்.
4. சங்கரில்லா ஹோட்டல் குண்டுதாரிகள் காத்தான்குடியை சேர்ந்த மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரான்.
5. தெமட்டகொடயை சேர்ந்த மொஹமட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் ஆகியோர்.
6. மட்டக்களப்பு தேவாலய தாக்குதல் தற்கொலை குண்டுதாரி காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் நஸார் மொஹமட் அசாத்.
7. கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டல் தாக்குதல் தற்கொலை குண்டுதாரி. தெமட்டகொடையை சேர்ந்த மொஹமட் இப்ராஹிம் இன்சாப் அஹமட்.
8. தெஹிவளை ட்ரொபிகல் இன் வெடிப்புடன் தொடர்புள்ள தற்கொலை குண்டுதாரி வெள்ளம்பிட்டியை சேர்ந்த அப்துல் லதீப் ஜமீல் மொஹமட்.
9. தெமட்டகொடை வீட்டு குண்டு வெடிப்பு தற்கொலை குண்டுதாரி தெமட்டகொடையை சேர்ந்த பாத்திமா இல்ஹாம்.
No comments:
Post a Comment