பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்க பணம் கொடுக்க மறுத்ததால் 19 வயது இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2019

பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்க பணம் கொடுக்க மறுத்ததால் 19 வயது இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை

எச்.எம்.எம்.பர்ஸான்
பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் வாங்க பணம் வழங்குமாறு கூறி பெற்றோர் பணம் கொடுக்காத காரணத்தால் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று (1) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி - மாஞ்சோலை மையவாடி வீதியிலுள்ள 19 வயதுடைய சாதிக்கீன் சயீட் அப்ரிடி எனும் இளைஞன் தன்னுடைய பெற்றோர்களிடம் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் வழங்குமாறு அடம்பிடித்துள்ளார் பெற்றோர்கள் பணம் கொடுக்காததினால் இன்று காலை 9.30 மணியளவில் இளைஞன் தன்னுடைய வீட்டுக் கூரையில் கயிற்றைக் கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த இளைஞனின் நண்பர் ஒருவர் இதே போன்று அவர்களின் பெற்றோர்களிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தரும்படி பெற்றோரிடம் அடம்பிடித்து பெற்றோர் வாங்கிக் கொடுக்க மறுத்ததால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இதனால் அவ் இளைஞனின் பெற்றோர் மகன் தற்கொலை செய்து கொள்வார் என்ற பயத்தில் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்துள்ளார்கள் எனவே நீங்களும் எனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கப் பணம் தர வேண்டும் தர மறுத்தால் நானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மரணித்த இளைஞன் தனது தாயாரான ஆதம் லெவ்வை ஜெஸிமாவிடம் கூறியதாக மரணித்த இளைஞனின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

தன்னுடைய மகன் இவ்வாறு செய்வார் என்று நான் எண்ணவில்லை என்னிடம் பணம் இல்லை பணம் கிடைத்தவுடன் தருகின்றேன் என்று சொன்ன போதும் அதை கேட்காமல் இவ்வாறு தற்கொலை செய்துள்ளார் என்று இளைஞனின் தாய் அழுது புலம்பினார்.

குறித்த இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment