ஜப்பான் நாட்டின் 125-வது மன்னர் அகிஹிட்டோ நேற்று பதவி விலகியதையடுத்து, அவரது மகன் நருஹிட்டோ இன்று புதிய மன்னராக அரியணை ஏறிய பின்னர் பேசியபோது, என் முன்னோர்களின் பாதையில் பணியை தொடர்வேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் 125-வது மன்னரான அகிஹிட்டோ (வயது 85) வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார்.
ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.
மன்னர் பதவி விலகல் மற்றும் புதிய மன்னர் முடிசூட்டும் விழா ஆகிய நிகழ்வுகளை மக்கள் கொண்டாடும் வகையில் அரசு ஏற்பாடுகள் செய்யும் என்றும் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்திருந்தார்.
அதன்படி அரசு செய்த ஏற்பாடுகளில் கலந்துக் கொண்டு, நேற்றிரவு முழுவதும் மக்கள் விழித்திருந்து வரவிருக்கும் புதிய தருணத்தை வரவேற்கும் விதமாக கோலாகலமாக கொண்டாடினர்.
ஜப்பான் முழுவதும் வாணவேடிக்கைகள் நிகழ்ச்சிகளோடு உற்சாகத்துடன் தொடங்கியது. திருமணம் செய்துகொள்ளவுள்ள ஜோடிகள் தங்கள் நிச்சயதார்தத்தை நேற்று நள்ளிரவு நடத்தினர். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நள்ளிரவில் பெயரிட்டனர்.
இன்று காலை முடி சூடிய புதிய மன்னர் அரியணை ஏறிய பின்னர் முதன்முறையாக பேசுகையில், 'அரசியலமைப்பின்படியே எனது செயல்பாடுகள் இருக்கும். மக்களின் எண்ணங்களுக்கேற்ப செயல்பட்டு, அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்.
நான் பொறுப்பேற்றிருக்கும் இந்த மிக முக்கியமான பதவியை நினைக்கும்போது, புத்துணர்ச்சி அடைந்ததாக உணர்கிறேன். என் முன்னோர்களின் பாதையில் பணியை தொடர்வேன்' என கூறினார்.
No comments:
Post a Comment